இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. 

இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் உலக கோப்பையுடன் முடிந்துவிட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கருத்தில்கொண்டு அந்த தொடர் முடியும் வரை பயிற்சியாளர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. 

வெஸ்ட் இண்டீஸ் தொடருடன் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஜெயவர்தனே, டாம் மூடி, மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக கூறப்படுபவர்களும் அந்த தகவலை உறுதி செய்யவில்லை. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் ராபின் சிங் விண்ணப்பித்துள்ளார். ராபின் சிங் ஏற்கனவே இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரை இருந்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராபின் சிங் விண்ணப்பித்துள்ளார். 

இந்திய அணிக்காக 136 ஒருநாள் போட்டிகளிலும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் ஆடியுள்ளார்.