Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: ரிஷப் பண்ட் அதிரடி அரைசதம்.. நங்கூரம் போட்ட கோலி..! கோலி - பண்ட் ஜோடி சிறப்பான பேட்டிங்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்த நிலையில், அதன்பின்னர் விராட் கோலியும் ரிஷப் பண்ட்டும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.
 

rishabh pant scores important fifty and kohli put anchor in second innings of third test against south africa
Author
Cape Town, First Published Jan 13, 2022, 4:37 PM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபாரமான பேட்டிங்கால் (79) முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி கீகன் பீட்டர்சனின் (72) பொறுப்பான பேட்டிங்கால் 210 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா, அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

13 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயன்க் அகர்வால் (7) மற்றும் கேஎல் ராகுல் (10) ஆகிய இருவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 2ம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. புஜாராவும் கோலியும் களத்தில் இருந்தனர்.

3ம் நாளான இன்றைய ஆட்டத்தை புஜாராவும் கோலியும் தொடர்ந்தனர். முதல் ஓவரை ஜான்சென் வீசினார். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே புஜாரா 9 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதற்கடுத்த ஓவரிலேயே ரபாடாவின் பந்தில் ரஹானே ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

58 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 5வது விக்கெட்டுக்கு கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். இந்த தொடரில் இதுவரை ஒரு இன்னிங்ஸில் கூட சரியாக ஆடாத ரிஷப் பண்ட் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானார். இந்நிலையில், முக்கியமான நேரத்தில் பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்துள்ளார்.

விராட் கோலி ஒருமுனையில் நங்கூரம் போட்டு நிலைத்து நிற்க, ரிஷப் பண்ட் அடித்து ஆடிவருகிறார். 3ம் நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்துள்ளது. மொத்தமாக 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விராட் கோலி 28 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios