இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதம் விளாசிய ரிஷப் பண்ட் தோனியின் 2 சாதனைகளை முறியடித்துள்ளார்.
Rishabh Pant Breaks Dhoni's 2 Records: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 359 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளிய இந்திய பேட்ஸ்மேன்கள் துரிதமாக ரன்கள் சேர்த்தனர்.
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட்
23 வயதான தொடக்க இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 5வது சதம் விளாசினார். 144 பந்துகளில் தனது சதத்தை எட்டிய அவர் 16 பவுண்டரி, 1 சிக்சர் விளாசி 101 ரன்களில் அவுட் ஆனார். இதேபோல் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் அதிரடி சதம் விளாசினார். டெஸ்ட்டில் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே அவர் சதம் அடித்து அசத்தினார்.
2வது நாள் ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம்
மேலும் துணை கேப்டன் ரிஷப் பண்ட்டும் சூப்பராக விளையாடி அரை சதம் அடித்திருந்தார். நேற்றைய முதல் நாள் முடிவில் சுப்மன் கில் 16 பவுண்டரி, 1 சிக்சர்களுடன் 127 ரன்களுடனும், துணை கேப்டன் ரிஷப் பண்ட் 102 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இன்றும் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார்கள்.
ரிஷப் பண்ட் அதிரடி சதம்
ரிஷப் பண்ட் வரிசையாக பவுண்டரிகளாக விளாச, கில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலிஷ் ஷாட்களை அடித்தார். கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், பென் ஸ்டோக்ஸ் என அனைத்து பவுலர்களை பயன்படுத்தியும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை. தொடர்ந்து அதிரடி பாணியை கையாண்ட ரிஷப் பண்ட் சோயிப் பஷிர் பந்தில் சிக்சர் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 7வது சதத்தை பூர்த்தி செய்தார்.
இங்கிலாந்து மண்ணில் 3வது சதம்
146 பந்துகளில் சதம் விளாசிய அவர் பல்டியடித்து அதை கொண்டாடினார். சதம் அடித்த பிறகும் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட்டின் 3வது சதம் இதுவாகும். ஏற்கெனவே ஓவல், பர்மிங்காமில் சதம் அடித்திருந்த அவர் இப்போது லீட்ஸிலும் சதம் விளாசியுள்ளார்.
தோனியின் சாதனையை முறியடித்தார்
மேலும் இந்த சதத்தின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அதாவது ரிஷப் பண்ட் இதுவரை 7 சதங்கள் விளாசியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி 6 சதங்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
சிக்சர்களிலும் தோனியை முந்தினார்
இந்த போட்டியில் இதுவரை 7 சிக்சர்கள் விளாசியுள்ள ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 76 இன்னிங்சில் 79 சிக்சர்கள் விளாசியுள்ளார். தோனி 144 இன்னிங்சில் 78 சிக்சர்களை நொறுக்கி இருந்த நிலையில், பண்ட் இந்த பட்டியலிலும் தோனியை முந்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த இந்தியர்களில் வீரேந்திர சேவாக் 178 இன்னிங்சில் 90 சிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 116 இன்னிங்சில் 88 சிக்சர்கள் விளாசியுள்ளார்.
