இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் சாய் சுதர்சன் தனது அறிமுக போட்டியில் டக் அவுட் ஆனார். இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
India vs England Test: Sai Sudharsan Duck Out: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆண்டர்சன் டெண்டுல்கர் எனப்படும் இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 20ம் தேதி) லீட்ஸில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் களம் கண்டனர்.
ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் சூப்பர் தொடக்கம்
தொடக்கம் முதலே ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஏதுவான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டியடித்த அவர்கள் நல்ல பந்துகளை அடிக்காமல் விட்டனர். இங்கிலாந்து வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் அதிவேகமாக பந்துகள் வீசியும் இருவரும் திறம்பட சமாளித்தனர். ஜெய்ஸ்வால் ஒருபக்கம் அதிரடி பவுண்டரிகளை விளாச கே.எல்.ராகுல் தனக்கே உரித்தான பாணியில் சில அற்புதமான கவர் டிரைவ்கள், ஸ்டிரைட் டிரைவ்களை அடித்தார்.
எதிர்பார்த்த அளவு ஸ்விங், பவுன்ஸ் இல்லை
வழக்கமாக இங்கிலாந்து பிட்ச்சில் முதல் நாளில் நன்றாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இருக்கும். ஆனால் இன்று ஹெடிங்கில் வெயில் அடித்த நிலையில், பந்து எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை. இதேபோல் பவுன்சும் சுத்தமாக இல்லை. இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக போய் விட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் அடித்து ஆடிக் கொண்டிருந்தனர்.
தேவையில்லாமல் அவுட் ஆன கே.எல்.ராகுல்
24.1 ஓவர்களில் இந்திய அணி 91 ரன்கள் எடுத்திருந்தபோது கே.எல்.ராகுல் தேவையில்லாத ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதுவரை பொறுமையாக ஷாட்களை ஆடிய அவர் கார்ஸ் வீசிய அவுட் சைட் ஆப் லெந்த் பந்தை தேவையில்லாமல் அடிக்கப் போய் அது ஜோ ரூட் கையில் தஞ்சம் புகுந்தது. 78 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல் அதிருப்தியுடன் நடையை கட்டினார்.
சாய் சுதர்சன் டக் அவுட்
அடுத்து விராட் கோலியின் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுக வீரராக களமிறங்கினார். தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், டக் அவுட் ஆகி அனைவருக்கும் ஏமாற்றத்தை பரிசளித்தார் சாய் சுதர்சன். அதாவது தான் சந்தித்த 4வது பந்தில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச்சாகி ஆட்டமிழந்தார்.
தவறான பந்தில் அவுட் ஆன சாய் சுதர்சன்
அதிலும் சாய் சுதர்சன் அவுட் ஆன விதம் தான் ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து லெக் சைடுக்கு வெளியே வைடு ஆக சென்றது. மிகவும் சாதாரண அந்த பந்தை சாய் சுதர்சன் அடிக்கப் போய் கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்சின் தவறான அந்த பந்தை எளிதாக பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது ரன் கணக்கை தொடங்கி இருக்கலாம். ஆனால் சிறந்த வீரரான சாய் சுதர்சன் மோசமான பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணி 2 விக்கெட் இழந்தது
இப்படியாக கே.எல்.ராகுல் மற்றும் சாய் சுதர்சன் செய்த தவறால் இந்திய அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்தது. முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.
