ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித்தை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங்கும் வியந்து புகழ்ந்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்கள் நால்வரில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். நால்வருமே சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், நிலையான ஆட்டம் மற்றும் சாதனைகளின் காரணமாக விராட் கோலி தான் நால்வரில் சிறந்த பேட்ஸ்மேனாக முன்னாள் ஜாம்பவான்களால் புகழப்படுகிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி சிறந்த வீரராக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்மித் தான் கோலோச்சுகிறார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்த ஸ்மித், தடைக்கு பின் வேற லெவலில் ஆடிவருகிறார். 

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்தார். அந்த இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிபட்டதால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. அந்த காயம் காரணமாக மூன்றாவது போட்டியிலும் ஆடவில்லை. 

நான்காவது போட்டியில் மீண்டும் களமிறங்கிய ஸ்மித், தன்னை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணி கருதிய ஆர்ச்சரை அலறவிட்டார். அபாரமாக ஆடிய ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.  ஆஷஸ் வரலாற்றில் டான் பிராட்மேன், ஹாமண்ட் ஆகியோருக்கு அடுத்த வெற்றிகரமான வீரராக ஸ்மித் திகழ்கிறார். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஷஸ் தொடரிலும் சாதனைகளை குவித்துவருகிறார். சமகால டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக ஸ்மித் வலம்வருகிறார். 

முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்ததோடு இல்லாமல், இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து 82 ரன்களை குவித்தார். விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸ் ஆடவைக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடியதால் சதத்தை தவறவிட்டு 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இல்லையெனில் அதிலும் சதமடித்திருப்பார். 

ஸ்மித்தின் ஆட்டத்தை பார்த்துவிட்டு ஏற்கனவே மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் லெஜண்ட் பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங்கும் வியந்து புகழ்ந்துள்ளார். 

நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் இரட்டை சதமடித்த பிறகு, ஸ்மித் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், ஸ்மித் ஜீனியஸ் பேட்ஸ்மேன். மறுபடியும் ஒரு அபாரமான இன்னிங்ஸ். ஸ்மித் பேட்டிங்கின்போது தவறே செய்வதில்லை. அவரது கவனக்குவிப்பு வேற லெவலில் உள்ளது. அவரது கவனக்குவிப்பு வியப்பளிக்கிறது என்று பாண்டிங் புகழ்ந்துள்ளார்.