இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயன்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரித்வி ஷா டக் அவுட்டாக, மயன்க் அகர்வால் 17 ரன்களுக்கும் புஜாரா 43 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 100 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. மிட்செல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தில் பிரித்வி ஷா க்ளீன் போல்டானார். அவர் அவுட்டாவதற்கு சில நொடிகளுக்கு முன்,  7 கிரிக்கெட் சேனலில் வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங், பிரித்வி ஷாவின் பேட்டிற்கும் கால்காப்பிற்கும் இடையே எப்போதுமே பெரிய இடைவெளி இருக்கும். அதைத்தான் ஆஸ்திரேலிய பவுலர்கள் டார்கெட் செய்வார்கள் என்றார். அவர் சொல்லி வாயை மூடுவதற்குள், அதேபோல பேட்டிற்கும் காலுக்கும் இடையே பந்தை விட்டு போல்டானார் பிரித்வி ஷா. அந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

ஐபிஎல்லில் பிரித்வி ஷா ஆடும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங். பிரித்வி ஷாவின் பலம், பலவீனங்களை நன்கறிந்தவர் பாண்டிங். அந்தவகையில், மிகச்சரியாக பிரித்வி ஷாவின் பலவீனத்தை தெரிவிக்க, அடுத்த நொடி அதே மாதிரியே அவர் ஆட்டமிழந்தார்.