கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் நடத்தப்பட்டது. ஐபிஎல் 13வது சீசன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 14வது சீசன் இந்தியாவில் நடந்துவந்த நிலையில், கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் தொடர் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 14வது சீசனில் பாதி லீக் சுற்று வெற்றிகரமாக நடந்த நிலையில், கேகேஆர் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே அணியை சேர்ந்த மூவர், டெல்லி கேபிடள்ஸ் வீரர் அமித் மிஷ்ரா மற்றும் சன்ரைசர்ஸ் வீரர் ரிதிமான் சஹா என அடுத்தடுத்து கொரோனா உறுதியானதால் ஐபிஎல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பயோ பபுளில் பாதுகாப்பாக இருந்தும் கூட வீரர்களுக்கு கொரோனா பரவியது. கொரோனா 2ம் அலை இந்தியாவில் அதிதீவிரமாக பரவிவரும் வேளையில், ஐபிஎல் மட்டுமே மக்களுக்கு சில மணி நேர மகிழ்ச்சியை அளித்துவந்தது. இப்போது அதற்கும் ஆப்பு வைத்துவிட்டது கொரோனா.

இந்நிலையில், ஐபிஎல் 14வது சீசனை இந்தியாவில் நடத்த வேண்டாம் என்றும் இந்த சீசனையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தியதாகவும், ஆனால் இந்தியாவில் நடத்துவதில் உறுதியாக இருந்த பிசிசிஐ, அந்த ஆலோசனையை கேட்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல்லுக்கு முன் இங்கிலாந்து தொடரை இந்தியாவில் பிசிசிஐ எந்த பிரச்னையும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. அந்த நம்பிக்கையில் ஐபிஎல்லையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிடலாம் என பிசிசிஐ நம்பிய நிலையில், இப்போது ஐபிஎல் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.