ஆர்சிபி வீரர் பில் சால்ட் சொந்த நாடான இங்கிலாந்து சென்றிருந்தார். அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்து பார்க்கலாம்.
Will RCB player Phil Salt play IPL Final 2025: ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் இடையே இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும். பெங்களூரு அணிக்கு ரஜத் படிதார், பஞ்சாப் அணிக்கு ஷ்ரேயஸ் ஐயர் தலைமை தாங்குகின்றனர். லீக் சுற்றில் இரு அணிகளும் நான்கு முறை மோதியதில், முதல் போட்டியில் பஞ்சாப் வென்றது. இரண்டாவது போட்டியிலும் முதல் தகுதிச் சுற்றிலும் ஆர்சிபி வெற்றி பெற்றது. இன்று மழை வாய்ப்பு இருப்பதால் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.
பில் சால்ட் பயிற்சி மேற்கொள்ளவில்லை
இந்நிலையில், ஆர்சிபி அதிரடி வீரர் பில் சால்ட் இன்றைய போட்டியில் விளையாடுவாரா? என சந்தேகம் எழுந்தது. அதாவது மனைவியின் பிரசவத்திற்காக சொந்த நாடான இங்கிலந்து சென்றிருந்த பில் சால்ட் திரும்புவாரா என்ற சந்தேகம் ஆர்சிபி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. நேற்று நரேந்திர மோடி மைதானத்தில் ஆர்சிபி அணி பயிற்சி மேற்கொண்டபோது சால்ட் இல்லாதது பேசுபொருளானது.
ஆர்சிபியின் நம்பிக்கை நாயகன் பில் சால்ட்
இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இங்கிலாந்து சென்றிருந்த தொடக்க வீரர் பில் சால்ட் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் சால்ட். 12 போட்டிகளில் 175.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 387 ரன்கள் குவித்தார். முதல் தகுதிச் சுற்றில் பஞ்சாப் அணிக்கு எதிராக 56 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தது சால்ட்டின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும்.
டிம் டேவிட் விளையாடுவாரா?
அதே வேளையில் ஆர்சிபி அணியின் அதிரடி வீரரும், சிறந்த பினிஷருமான டிம் டேவிட் பைனலில் விளையாடுவாரா? இல்லையா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. காயம் காரணமாக டிம் டேவிட் கடந்த சில போட்டிகளில் விளையாடவில்லை. டேவிட் பைனலில் விளையாடுவாரா? என ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரிடம் கேட்டபோது, 'அது உறுதியாகத் தெரியவில்லை' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
