ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கோலியும் தேவ்தத் படிக்கல்லும்  தொடக்க வீரர்களாக இறங்கினர். வருண் சக்கரவர்த்தி வீசிய இன்னிங்ஸின் 2வது ஓவரிலேயே கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ரஜாத் பட்டிதரும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவர்த்திக்கு அதன்பின்னர் பவர்ப்ளேயில் பவுலிங்கே கொடுக்கப்படவில்லை. 2 விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த மேக்ஸ்வெல், வந்தது முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் களத்தில் நிலைத்த பின்னர் அவரை வீழ்த்துவது கேகேஆருக்கு பெரும் சவாலானது. மேக்ஸ்வெல் களத்தில் நிலைத்ததால், ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தியின் பவுலிங்கும் எடுபடவில்லை. வருணின் பவுலிங்கையும் வெளுத்துவாங்கினார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடிய அதேவேளையில், மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிக்கொண்டிருந்த தேவ்தத் படிக்கல் 25 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் மேக்ஸ்வெல்லுடன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். சென்னை வெயிலால் பெரும் அவதிப்பட்ட மேக்ஸ்வெல், 49 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் அடித்த நிலையில், 17வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் ஸ்கோர் செய்யும் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த டிவில்லியர்ஸ், ரசல், ஹர்பஜன் சிங் ஆகிய இருவரின் பவுலிங்கிலும் சிக்ஸர் மழை பொழிந்து 34 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்து ஆர்சிபி அணி 20 ஓவரில் 204 ரன்களை எட்ட உதவினார்.

பேட்டிங்கிற்கு கடும் சவாலான சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 20 ஓவரில் 204 ரன்கள் என்பது பெரிய ஸ்கோர். 205 ரன்கள் என்பது கேகேஆருக்கு மிகக்கடினமான இலக்கு.