சன்ரைசர்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி வெறும் 68 ரன்களுக்கு சுருண்டது ஆர்சிபி அணி.
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:
அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீசா சுஜித், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
ஆர்சிபி அணி:
அனுஜ் ராவத், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான ஃபாஃப் டுப்ளெசிஸ், அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரையுமே இன்னிங்ஸின் 2வது ஓவரிலேயே வெளியேற்றினார் மார்கோ யான்சென். தனது முதல் ஓவரிலேயே ஃபாஃப், கோலி ஆகிய இரண்டு பெரிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி சன்ரைசர்ஸை டிரைவர் சீட்டில் அமரவைத்தார் யான்சன்.
அதன்பின்னர் எழவே முடியாமல் விழுந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல்லை 12 ரன்னில் நடராஜன் வீழ்த்தினார். பிரபுதேசாயை 15 ரன்னில் வீழ்த்திய ஜெகதீஷா சுஜித், தினேஷ் கார்த்திக்கை டக் அவுட்டாக்கி அனுப்பினார். மேக்ஸ்வெல்லை வீழ்த்திய நடராஜன், அதன்பின்னர் ஹர்ஷல் படேல்(4) மற்றும் ஹசரங்கா (8) ஆகிய இருவரையும் வீழ்த்த, 16.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆர்சிபி அணி.
சன்ரைசர்ஸ் அணி சார்பில் யான்சென் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் அணி 69 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிவருகிறது.
