லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 181 ரன்களை குவித்து, 182 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினெஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல்(கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் அனுஜ் ராவத் 4 ரன்னிலும், விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகியும் வெளியேறினர். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 11 பந்தில் 23 ரன்கள் அடித்து க்ருணல் பாண்டியாவின் சுழலில் வீழ்ந்தார்.
பிரபுதேசாய் 10 ரன்னும், ஷபாஸ் அகமது 26 ரன்னும் மட்டுமே அடித்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஆர்சிபி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ஃபாஃப் டுப்ளெசிஸ் 64 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 96 ரன்களை குவித்து, 4 ரன்னில் சதத்தை தவறவிட்டு கடைசி ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸருடன் 8 பந்தில் 13 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 181 ரன்களை குவித்து, 182 ரன்கள் என்ற சவாலான இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸூக்கு நிர்ணயித்துள்ளது.
