டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி, தினேஷ் கார்த்திக்கின் காட்டடி அரைசதம் ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 190 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், கலீல் அகமது. 

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் அனுஜ் ராவத் (0) மற்றும் டுப்ளெசிஸ் (8) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். கோலி 12 ரன்னில் ரன் அவுட்டானார். பிரபுதேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 55 ரன்னில் ஆட்டமிழக்க, 11.2 ஓவரில் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி.

அதன்பின்னர் தினேஷ் கார்த்திக்கும் ஷபாஸ் அகமதுவும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினர். களத்தில் நிலைத்தபின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். 17 ஓவரில் ஆர்சிபி அணி 132 ரன்கள் அடித்திருந்த நிலையில், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார் தினேஷ் கார்த்திக். கடைசி 2 ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஷபாஸ் அகமதுவும் பவுண்டரியும் சிக்ஸருமாக அடிக்க, 20 ஓவரில் 189 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 190 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.

தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார் தினேஷ் கார்த்திக். முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் 28 ரன்களை குவித்து ஆர்சிபி அணியின் ஸ்கோரை வேற லெவலில் உயர்த்தினார் தினேஷ் கார்த்திக்.