ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்துமுடிந்துள்ளன. 12 சீசன்களின் முடிவில் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகள் என்றால் அவை, சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸும் தான். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ளது. சிஎஸ்கே அணி 3 முறை வென்றுள்ளது. 

சிஎஸ்கேவை விட மும்பை இந்தியன்ஸ் அணி ஒருமுறை அதிகமாக டைட்டிலை வென்றிருந்தாலும், சிஎஸ்கே தான் மிகவும் வெற்றிகரமான அணி. அதற்கு காரணம் கன்சிஸ்டன்சி. சிஎஸ்கே அணி 12 சீசன்களில் 10 சீசன்களில் ஆடியுள்ளது. அந்த 10ல் 8 முறை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும், ஆடிய 10 சீசனிலுமே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது. லீக் சுற்றுடன் வெளியேறாத ஒரே ஐபிஎல் அணி சிஎஸ்கே தான். 

இந்த பெருமைகளுக்கெல்லாம் முக்கிய காரணம் தோனி தான். தோனி பேட்டிங்கிற்கு அப்பாற்பட்டு அவரது மிகத்திறமையான கேப்டன்சி தான் அந்த அணியின் ஆதிக்கத்திற்கு காரணம். தோனி இல்லாத சிஎஸ்கேவை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. தோனியின் களவியூகமும், அவரது புத்திக்கூர்மையும், ஆட்டத்தின் மீதான புரிதலும், சாமர்த்தியமான முடிவுகளும் தான் அந்த அணி வெற்றிகரமாக திகழ்வதற்கு காரணம். ஒரு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்பதை கடந்து அவரது கேப்டன்சி தான் அந்த அணியின் மிகப்பெரிய பலம். \

சிஎஸ்கே வெற்றிகரமாக திகழ்வதற்கு, அப்படியே நேர்மாறாக ஆர்சிபி திகழ்கிறது. இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத மூன்று அணிகளில் ஆர்சிபியும் ஒன்று. ஐபிஎல் தொடங்கிய 2008லிருந்தே, ராகுல் டிராவிட், ஜாக் காலிஸ், ரோஸ் டெய்லர், அனில் கும்ப்ளே, கோலி, டிவில்லியர்ஸ், கெய்ல், டிவில்லியர்ஸ், மிட்செல் ஸ்டார்க் என பல சிறந்த வீரர்களை பெற்றிருந்தும், அந்த அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. 

கோலி கேப்டனான பிறகு காலங்கள் ஓடுகிறதே தவிர, அந்த அணியின் கோப்பை கனவு நிறைவேறவில்லை. அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாததற்கு முக்கியமான காரணங்கள், ஆர்சிபி அணி நிர்வாகத்தின் வீரர்கள் தேர்வு, ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை நம்பி தொடர் வாய்ப்பளிக்காதது, இவற்றுடன் சேர்த்து சிறந்த கேப்டன்சியின்மையும் ஒரு காரணம் தான். 

ஆர்சிபி, அந்த ஒரு விஷயத்தை சரியாக செய்திருந்தால், இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. 2008ல் ஐபிஎல் தொடங்கியபோது, அதற்கான முதல் ஏலத்தில், தோனியை எடுக்க சிஎஸ்கேவுடன் போட்டி போட்ட ஆர்சிபி, அதிகமான தொகையை தோனி ஒருவர் மேல் மட்டுமே முதலீடு செய்ய பயந்து தோனியை தவறவிட்டது. இந்த தகவலை அந்த அணியின் முன்னாள் சி.இ.ஓ-வே தெரிவித்துள்ளார். 

அன்றைக்கு மட்டும் தோனியை எடுத்திருந்தால், ஆர்சிபியின் லெவலே வேற மாதிரி இருந்திருக்கும். கோப்பைக்கு குட்டிக்கரணம் அடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. 

ஆர்சிபி அணி சார்பில் முதல் ஏலத்தில் பங்கெடுத்த அந்த அணியின் முன்னாள் சி.இ.ஓ சாரு ஷர்மா இப்போது அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். ”தோனியை 1.5 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுத்து, அவர் சரியாக ஆடவில்லையென்றால், அவர் அந்த பணத்திற்கு தகுதியானவர் தானா? அவருக்கு ஏன் இவ்வளவு தொகை கொடுத்தீர்கள்? என்ற சர்ச்சைகள் எழும். அதுமட்டுமல்லாமல் இது தனிநபர் சார்ந்த விளையாட்டல்ல; குழு விளையாட்டு. எனவே ஒருவருக்கு மட்டும் அதிகமான தொகை கொடுத்து எடுத்துவிட்டு, அவர் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகிவிட்டார் என்றால் சிக்கல். அதனால்தான் தோனியை எடுக்கவில்லை என்று சாரு சர்மா தெரிவித்துள்ளார். 

தோனிக்கு அதிகமான தொகை கொடுத்து எடுத்து, அவர் சரியாக ஆடவில்லையென்றால்..... என்ற பயத்தில் தான் ஆர்சிபி தோனியை எடுக்காமல் தவறவிட்டுள்ளது. முதல் சீசனிலிருந்தே அந்த அணி ஏலத்தில் தவறு செய்வதை தொடங்கிவிட்டது.