IPL 2023: ராஜஸ்தானை வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆர்சிபி அபார வெற்றி
172 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸை வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 112 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியுமே புள்ளி பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அந்தவகையில் பிளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆர்சிபியும் மோதின.
ஜெய்ப்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் ஹசரங்காவிற்கு பதிலாக பிரேஸ்வெல்லும், ஹேசில்வுட்டுக்கு பதிலாக வைன் பார்னெலும் ஆடினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டிரெண்ட் போல்ட்டுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா ஆடினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜோ ரூட், த்ருவ் ஜுரெல், ஷிம்ரான் ஹெட்மயர், ரவிச்சந்திரன் அஷ்வின், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎம் ஆசிஃப், சந்தீப் ஷர்மா, ஆடம் ஸாம்பா.
IPL 2023: முக்கியமான போட்டியில் சிஎஸ்கே - கேகேஆர் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், மைக்கேல் பிரேஸ்வெல், வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி 19 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக பேட்டிங் ஆடிய கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே அரைசதம் அடித்தனர். ஆனால் இருவருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாமல் டுப்ளெசிஸ் 55 ரன்களுக்கும், மேக்ஸ்வெல் 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். லோம்ரோர்(1) மற்றும் தினேஷ் கார்த்திக் (0) சொதப்பினர். ஆனால் கடைசியில் அனுஜ் ராவத் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 11 பந்தில் 29 ரன்கள் அடித்து சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் ஆர்சிபி அணி 171 ரன்கள் அடித்தது ஆர்சிபி அணி.
172 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 10.3 ஓவரில் ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய இருவருமே ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்கள். கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் இம்பேக்ட் பிளேயராக இறங்கிய தேவ்தத் படிக்கல் இருவரும் தலா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
ஜோ ரூட் 10 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். த்ருவ் ஜுரெல் (1), அஷ்வின்(0), ஸாம்பா(2) ஆகியோரும் சொதப்பினர். தனி ஒருவனாக நின்று அடித்து ஆடிய ஷிம்ரான் ஹெட்மயருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அடித்து ஆடிய ஹெட்மயர் 19 பந்தில் 4 சிக்ஸர்களுடன்35 ரன்கள் அடித்து அவரும் ஆட்டமிழக்க, 10.3 ஓவரில் வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ராஜஸ்தானை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி அணி.