கேகேஆருக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் ஆடியது. அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவிக்கு பதிலாக டிம் சௌதி சேர்க்கப்பட்டார்.
ஆர்சிபி அணி:
ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
கேகேஆர் அணி:
வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயரை(10) ஆகாஷ் தீப்பும், அஜிங்க்யா ரஹானேவை (9) முகமது சிராஜும் வீழ்த்தினர். அதன்பின்னர் கேகேஆர் அணியின் மிடில் ஆர்டரை ஆர்சிபி ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா சரித்தார். கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (13) மற்றும் சுனில் நரைன் (12) ஆகிய இருவரையும் ஹசரங்கா வீழ்த்த, நிதிஷ் ராணாவை (10) ஆகாஷ் தீப் மற்றும் சாம் பில்லிங்ஸை (14) ஹர்ஷல் படேல் ஆகிய இருவரும் வீழ்த்தினர்.
ஷெல்டான் ஜாக்சனை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கி அனுப்பிய ஹசரங்கா, டிம் சௌதியை ஒரு ரன்னில் வெளியேற்றினார். வழக்கம்போலவே தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடி ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் விளாசிய ஆண்ட்ரே ரசல் 18 பந்தில் 25 ரன்கள் அடித்த நிலையில் ஹர்ஷல் படேலின் சாமர்த்தியமான பவுலிங்கில் வீழ்ந்தார். டெயிலெண்டர் உமேஷ் யாதவ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 12 பந்தில் 18 ரன்கள் அடித்தார். தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த கேகேஆர் அணி, 18.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
129 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் அனஜ் ராவத், உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் டுப்ளெசிஸை டிம் சௌதி 5 ரன்னில வெளியேற்றினார். கோலியை உமேஷ் யாதவ் 12 ரன்னுக்கு அவுட்டாக்கினார். 17 ரன்னுக்கே ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் நன்றாக ஆடிய டேவிட் வில்லியை 18 ரன்னில் சுனில் நரைன் வீழ்த்தினார். ஆனால் அதன்பின்னர் களமிறங்கிய ஷபாஸ் அகமது அடித்து ஆடி 20 பந்தில் 27 ரன்கள் அடித்து கேகேஆர் அணியை அச்சுறுத்திய நிலையில், அவரை 27 ரன்னில் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். ரூதர்ஃபோர்டும் 28 ரன்னில் ஆட்டமிழக்க, வனிந்து ஹசரங்கா வந்த வேகத்தில் 4 ரன்னுக்கு நடையை கட்டினார்.
இலக்கு எளிதானது தான் என்பதால் விக்கெட்டுகள் விழுந்தாலும் அது ஆர்சிபியை பாதிக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் ஹர்ஷல் படேலும் இணைந்து போட்டியை முடித்தனர். கடைசி ஓவரில் இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.
