உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன. 

இந்திய அணியின் 4ம் வரிசை வீரராக யார் அறிவிக்கப்படுவார் என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது. அப்படியிருக்கையில் உலக கோப்பை அணியின் நான்காம் வரிசை வீரராக பார்க்கப்பட்ட ராயுடு, அண்மைக்காலமாக சொதப்பியதால் அவரை நீக்கிவிட்டு அதிரடியாக விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். 

நடப்பு ஃபார்மின் அடிப்படையிலும் விஜய் சங்கர் ஒரு ஆல்ரவுண்டர் என்பதால், தேவைப்படும்போது பவுலிங்கும் வீசுவார் என்பதாலும் அவரை அணியில் எடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் பிரசாத் விளக்கமளித்திருந்தார். நான்காம் வரிசையில் விஜய் சங்கரையோ கேஎல் ராகுலையோ இறக்கலாம் என்ற வகையில் அணி தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 

விஜய் சங்கர் மிடில் ஓவர்களில் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து சிங்கிள் ரோடேட் செய்வதுடன் அவ்வப்போது பெரிய ஷாட்டுகளை அடித்தும் ஆடுகிறார். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசையில் இறங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுலும் அணியில் இருப்பதால் அவரை இறக்குவதற்கான வாய்ப்பும் உள்ளது.

உலக கோப்பையே தொடங்க உள்ள நிலையில், பல முன்னாள் வீரர்கள் இன்னும் நான்காம் வரிசை வீரர் குறித்த கருத்தை தெரிவித்துவருகின்றனர். எந்த வரிசையையும் இன்னாருக்குத்தான் என்று ஒதுக்காமல் சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை களமிறக்க வேண்டும் என்று கபில் தேவ், சந்தீப் பாட்டீல் ஆகியோர் தெரிவித்திருந்தனர். ராகுலை இறக்கலாம் என காம்பீரும் கேதர் ஜாதவ் தான் சரியான நான்காம் வரிசை வீரர் என கிர்மானியும் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு இன்னும் நான்காம் வரிசை வீரர் குறித்த கருத்துகளை பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துவரும் நிலையில், நான்காம் வரிசை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். எந்த இடத்திலும் மாற்றி மாற்றி இறக்கக்கூடிய வகையில் நல்ல வீரர்களை கொண்ட அணியை பெற்றுள்ளோம். நான்காம் வரிசையில் ஆடுவதற்கு எங்களிடம் பல வீரர்கள் உள்ளனர். எனவே அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என சாஸ்திரி தெரிவித்துள்ளார்.