2021 டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் சூப்பர் 12 சுற்றிலேயே வெளியேறியது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 2 பெரிய அணிகளிடமும் தோற்றதால் தான் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனது.
இந்நிலையில், தமிழக ஃபாஸ்ட் பவுலரும் யார்க்கர் மன்னனுமான டி.நடராஜனை 2021 டி20 உலக கோப்பையில் மிஸ் செய்ததாக அப்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள ரவி சாஸ்திரி, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயமடைந்ததால் நடராஜன் டி20 உலக கோப்பையில் ஆடவில்லை. ஆனால் அவரை உண்மையாகவே ரொம்ப மிஸ் செய்தோம். நடராஜன் ஸ்பெஷலிஸ்ட் டெத் பவுலர். யார்க்கர்களை துல்லியமாக வீசுவார். நல்ல கட்டுப்பாடான பவுலர். அவரது பந்து நினைப்பதை விட சற்று வேகமாக வரும். அவரை அணியில் எடுத்த அனைத்து போட்டிகளிலும் நாங்கள் ஜெயித்தோம். நடராஜனின் டி20 அறிமுக போட்டி, டெஸ்ட் அறிமுக போட்டி ஆகிய இரண்டிலுமே ஜெயித்தோம். நெட் பவுலராக அணியில் எடுக்கப்பட்ட நடராஜன், 2 ஃபார்மட்டில் இந்திய அணிக்காக ஆடினார் என்றார் சாஸ்திரி.
நடராஜன் காயத்திலிருந்து மீண்டு இப்போது ஐபிஎல் 15வது சீசனில் ஆடிவருகிறார். ஏலத்திற்கு முன் அவரை விடுவித்த சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் ரூ.4 கோடிக்கு நடராஜனை மீண்டும் எடுத்தது. ஐபிஎல்லில் நடராஜன் சிறப்பாக பந்துவீசிவருகிறார்.
