ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆடியபோது இந்திய அணிக்கு தான் கொடுத்த அறிவுரைகள் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 2017 முதல் 2021ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவரது பயிற்சியின் கீழ், வெளிநாடுகளில் அபாரமாக விளையாடி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை குவித்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக நீடித்திருக்கிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் 2018-19 மற்றும் 2020-21 ஆகிய 2 சுற்றுப்பயணங்களிலும் டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.

இந்நிலையில், ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்களான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட விதம் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, நான் இந்திய அணியின் டைரக்டராக இருந்தபோது, அணியின் பிரச்னைகளை கண்டறிவதுதான் எனது பணி. எனக்கு தேவையானவர்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை வெளியேற்றும் அதிகாரம் எனக்கு இருந்தது. ஆக்ரோஷமான, வெறித்தனமான கிரிக்கெட்டை ஆடுவது என்று முடிவு செய்து, அப்படித்தான் ஆடினோம். குறிப்பாக ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக ஆடும்போது, அவர்கள் ஒரு வார்த்தை கூறினால், அதை 3 மடங்காக திருப்பி கொடுக்குமாறு வீரர்களிடம் கூறினேன். 3 மடங்காக திருப்பியளிக்கும் பதிலடியில், 2வார்த்தை நமது மொழியிலும், ஒரு வார்த்தை அவர்களுக்கு புரியும்படியும் பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறினார்.