ஹர்திக் பாண்டியாவிடம் கபில் தேவை பார்க்கிறேன்..! ரவி சாஸ்திரி புகழாரம்
ஹர்திக் பாண்டியாவிடம் கபில் தேவை பார்ப்பதாகவும், ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா கபில் தேவ் மாதிரி வெற்றிகரமாக திகழ்வார் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. விராட் கோலிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மாவிடமிருந்து பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல்லை போல ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமாக திகழவில்லை.
ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்ற ஒரே ஆண்டில் அவரது கேப்டன்சியை மதிப்பிட முடியாது. அவரது கேப்டன்சி மீது குறைகூறமுடியாது. ஆனால் ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை என ஐசிசி டி20 தொடர்களில் அடுத்தடுத்த தோல்விகள் டி20 அணிக்கான அடுத்த கேப்டன் குறித்த விவாதத்திற்கு வித்திட்டது.
ஐபிஎல்லில் கேப்டன்சி செய்த முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை அடுத்த டி20 உலக கோப்பைக்கு கட்டமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன.
நியூசிலாந்து சுற்றுப்பயணத்துக்கான டி20 தொடரில் ரோஹித் சர்மா ஆடாததால் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக செயல்படுகிறார். இந்திய அணிக்கு ஒரு ஆல்ரவுண்டர் கேப்டனாக இருந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. அந்தவகையில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடுவதை பார்க்க முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்யும் நிலையில், ஹர்திக் பாண்டியாவை கபில் தேவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, மிகுந்த சுறுசுறுப்பும் உற்சாகமும் நிறைந்த வீரர் ஹர்திக் பாண்டியா. எனவே அந்த உற்சாகமும் சுறுசுறுப்பும் ஒட்டுமொத்த அணி மீதும் எதிரொலிக்கும். கபில் தேவ் கேப்டனாக இருந்தபோது இருந்த அணிச்சூழல் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. ஹர்திக் பாண்டியா மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர், அதுவும் ஒரு ஆல்ரவுண்டர், 20 ஓவரும் ஆட்டத்தில் பங்களிப்பை செய்யக்கூடிய ஒரு வீரர் கேப்டனாக இருக்கும்போது அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அது அணியின் ஸ்பிரிட்டையே உயர்த்திவிடும். ஹர்திக் பாண்டியா கேப்டன்சியை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என்றார் ரவி சாஸ்திரி.