ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே அபார சாதனை படைத்துள்ளார் ரஷீத் கான். 

உலக கோப்பை தோல்வி எதிரொலியாக, ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் நீக்கப்பட்டு, மூன்று விதமான அணிகளுக்கும் ரஷீத் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரஷீத் கான் கேப்டனான பிறகு, முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி, வங்கதேசத்துடன் டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்கள் அடித்தது. ஆஃப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா சதமும், அஸ்கர் ஆஃப்கான் மற்றும் ரஷீத் கான் ஆகிய இருவரும் அரைசதமும் அடித்தனர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகிய மூவரது விக்கெட் உட்பட மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியை 205 ரன்களுக்கு சுருட்டினார் ஆஃப்கான் கேப்டன் ரஷீத் கான். 

இதையடுத்து 137 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது ஆஃப்கானிஸ்தான் அணி. இந்த போட்டியில் பேட்டிங்கில் அரைசதம் அடித்த ரஷீத் கான், பவுலிங்கிலும் அசத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் கேப்டனாக அறிமுகமான போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரஷீத் கான் இணைந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சம்பவத்தை செய்த நான்காவது வீரர் ரஷீத் கான் ஆவார். எஃப்.எஸ் ஜாக்சன்(1905ம் ஆண்டு), பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான்(1982), வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன்(2009) ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்த பட்டியலில் இணைந்துள்ளார் ரஷீத் கான்.