உலக கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரே பார்க்க ஆசைப்பட்ட வீரர் படுமோசமான சாதனையை செய்துள்ளார்.

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ரிஸ்ட் ஸ்பின்னர் ரஷீத் கான் ஆகிய மூவரின் ஆட்டத்தை பார்க்க மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ஆவலாக இருப்பதாக தெரிவித்திருந்தார். 

ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரராகவும் ரிஸ்ட் ஸ்பின்னராக மட்டுமல்லாமல் ஆல்ரவுண்டராகவும் ஜொலித்துவரும் ரஷீத் கான், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மோசமான சாதனை ஒன்றை செய்தார். 

வலது கை ரிஸ்ட் ஸ்பின்னரான ரஷீத் கானின் பவுலிங்கை எதிர்கொள்வது வலது கை பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தாலும் இடது கை பேட்ஸ்மேன்கள் அவரது பவுலிங்கை தெறிக்கவிடுகின்றனர். கெய்ல், வார்னர், மோர்கன் போன்ற வீரர்கள் ரஷீத் கானின் பவுலிங்கை தரமாக வைத்து செய்கின்றனர். 

இங்கிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான நேற்றைய போட்டியில் இயன் மோர்கன், ரஷீத் கானின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். இயன் மோர்கனின் மிரட்டலான அதிரடியால் 397 ரன்களை குவித்த இங்கிலாந்து அணி, 247 ரன்களுக்கு ஆஃப்கானிஸ்தானை சுருட்டி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. 

இந்த போட்டியில் இயன் மோர்கன் வெறும் 71 பந்துகளில் 17 சிக்ஸர்களுடன் 148 ரன்களை குவித்தார். உலகின் சிறந்த பவுலராக வலம்வரும் ரஷீத்தின் பவுலிங்கை தெறிக்கவிட்டார். ரஷீத் கான் இந்த போட்டியில் 9 ஓவர்கள் மட்டுமே வீசி 110 ரன்களை விட்டுக்கொடுத்தார் ரஷீத் கான். இதுதான் உலக கோப்பை வரலாற்றில் மோசமான பவுலிங். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலும் இதுதான் இரண்டாவது மோசமான பவுலிங்.

ரஷீத் கானின் பவுலிங்கில் அடிக்கப்பட்ட 11 சிக்ஸர்களில் 7 சிக்ஸர்கள் மோர்கன் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.