ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலத்திற்கு முன், அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துக்கொண்டு, தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டுள்ளது. 

அந்தவகையில், சிஎஸ்கே அணி பியூஷ் சாவ்லா, ஹர்பஜன் சிங், முரளி விஜய், கேதர் ஜாதவ், மோனுகுமார் சிங் ஆகியோரை கழட்டிவிட்டுள்ளது. ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில், அடுத்த சீசனுக்காக, ராஜஸ்தான் ராயல்ஸிடமிருந்து சீனியர் வீரர் ராபின் உத்தப்பாவை வாங்கியுள்ளது சிஎஸ்கே அணி.

ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே ஐபிஎல்லில் ஆடிவரும் சீனியர் வீரர்களில் ராபின் உத்தப்பாவும் ஒருவர். மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, புனே வாரியர்ஸ், கேகேஆர் ஆகிய அணிகளில் ஆடிய ராபின் உத்தப்பா, கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடினார். 189 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 129.99 ஸ்டிரைக் ரேட் மற்றும் 24 அரைசதங்களுடன் 4607 ரன்களை அடித்துள்ளார். 2014 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்து(660 ரன்கள்) ஆரஞ்சு தொப்பியை வென்ற உத்தப்பா, கேகேஆர் அணி 2வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவினார்.

ஐபிஎல்லின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்துவந்த உத்தப்பாவிற்கு கடந்த 2 சீசன்கள் சரியாக அமையவில்லை. 2019ல் கேகேஆர் அணிக்காக ஆடியபோது 115.1 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 282 ரன்கள் அடித்த உத்தப்பா,  கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வெறும் 196 ரன்கள் மட்டுமே அடித்தார்.

இந்நிலையில், அடுத்த சீசனில் அவர் தேவையில்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவெடுத்த நிலையில், அந்த அணியிடமிருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது.