கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தால் 20 ஓவரில் 217 ரன்களை குவித்து, 218 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
கேகேஆர் அணி:
ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ஷெல்டான் கோட்ரெல் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய், யுஸ்வேந்திர சாஹல்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லரும் படிக்கல்லும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 97 ரன்களை குவித்தனர். படிக்கல் 24 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், அதிரடியாக ஆடிய பட்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து அடித்து ஆடினார். சாம்சன் 19 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடி சதமடித்த ஜோஸ் பட்லர் 61 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இது பட்லருக்கு இந்த சீசனில் 2வது சதம். இதற்கு முன் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராகவும் ஒரு சதம் அடித்தார் சாம்சன்.
கடைசியில் ஹெட்மயர் 13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 217 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 218 ரன்கள் என்ற கடின இலக்கை கேகேஆருக்கு நிர்ணயித்துள்ளது.
