இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே 1-0 என முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இருந்தது.

இந்நிலையில், 2வது டெஸ்ட் கடந்த 13ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அசார் அலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் வீரர்கள் இந்த போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பினர். தொடக்க வீரர் அபித் அலி அரைசதம் அடித்தார். அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் ஆட்டமிழந்தார். கேப்டன் அசார் அலி 20 ரன்களில் அவுட்டானார். தொடக்க வீரர் ஷான் மசூத் ஒரு ரன்னிலும், ஆசாத் ஷாஃபிக்  5 ரன்னிலும், 11 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கிய ஃபவாத் ஆலம் ரன்னே அடிக்காமலும் ஆட்டமிழந்தனர். 

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 47 ரன்களில் ஸ்டூவர்ட் பிராடின் பந்தில் ஆட்டமிழக்க, யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாக, 215 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் அடித்திருந்தது. 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 2 செசன்களும் மழையால் ரத்தானது. கடைசி செசனும் நடப்பதற்கான வாய்ப்பு இல்லை. 

முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால், வெறும் 45 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. ஆனால், அதற்குள்ளேயே 5 விக்கெட்டுகளை இழந்து, முதல் நாள் ஆட்டத்தில் 126 ரன்கள் அடித்திருந்தது. முதல் நாள் ஆட்டம் மழை குறுக்கீடு இல்லாமல் நடந்திருந்தால் முதல் நாள் ஆட்டத்திலேயே பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகியிருக்கும். அந்தளவிற்கு மோசமாக அந்த அணி வீரர்கள் பேட்டிங் ஆடினார்கள். இங்கிலாந்தின் கை ஓங்கியிருந்த நிலையில், 2ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தானை விரைவில் ஆல் அவுட் செய்து முதல் இன்னிங்ஸை தொடங்கும் முனைப்பில் இருந்த பாகிஸ்தான் அணி அதை சரியாகவும் செய்தது. 

ஆனாலும் 2ம் நாளான நேற்றைய ஆட்டத்திலும் மழை குறுக்கீட்டால் வெறும் 40 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. அந்த 40 ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர் இங்கிலாந்து பவுலர்கள். ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் நேற்றைய ஆட்டமும் பாதிக்கு மேல் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 2ம் நாளான நேற்றைய ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் அடித்திருந்த நிலையில், 3ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 2 செசன்கள் முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. 

3வது நாள் ஆட்டமும் முடியவுள்ள நிலையில், ஒரு அணியின் முதல் இன்னிங்ஸே முடியாததால், இனிமேல் இந்த போட்டியில் முடிவு கிடைக்க வாய்ப்பே இல்லை. போட்டி கண்டிப்பாக டிரா என்ற நிலையை எட்டியுள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு. பாகிஸ்தான் அணிக்கு சாதகம் தான் இந்த மழை. ஏனெனில் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தன. ஆனால் மழையால் பாகிஸ்தான் தப்பித்தது.