இந்திய டெஸ்ட் அணியில் ஹனுமா விஹாரி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கான வாய்ப்பு குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.  

இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனாலும் அவர்களது திறமையின் மீதான நம்பிக்கை மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் விளைவாக அவர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அபாரமாக ஆடிவருகின்றனர். சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே மீது இவர்கள் அழுத்தம் போடுகின்றனர்.

இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் ஆடிய புஜாராவும் ரஹானேவும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் இடத்தை தக்கவைக்க நல்ல இன்னிங்ஸ் ஒன்று தேவை என்ற கட்டாயத்தில், அந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். ஆனால் அதே இன்னிங்ஸில் ஹனுமா விஹாரியும் அபாரமாக பேட்டிங் ஆடி அவர்களுக்கு டஃப் கொடுத்தார். 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் விஹாரி.

எனவே இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் தேர்வு மிகச்சவாலானதாகவே இருக்கும். சீனியர் வீரர்கள் சொதப்பும் அதேவேளையில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால், அணியின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வலுத்துள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் கோலி வந்துவிட்டால் விஹாரி தான் நீக்கப்படுவார். கண்டிப்பாக ரஹானே, புஜாரா ஆகியோரை அவ்வளவு எளிதில் இந்திய அணி நிர்வாகம் ஒதுக்காது. வரும் 11ம் தேதி 3வது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், ஹனுமா விஹாரி அருமையாக பேட்டிங் ஆடியிருக்கிறார். 2வது டெஸ்ட்டின் 2 இன்னிங்ஸ்களிலும் மிகச்சிறப்பாக ஆடினார். ஷ்ரேயாஸ் ஐயர் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். இவர்கள் இருவருமே அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சிறப்பாக பயன்படுத்தி அருமையாக விளையாடியிருக்கின்றனர். ஆனாலும் அணியில் சீனியர் வீரர்கள் இருக்கும் போது, இளம் வீரர்கள் அவர்களுக்கான வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். அதுவரை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் பெரிய ஸ்கோர் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், அடுத்த டெஸ்ட்டில் கோலி அணிக்குள் நுழைவதால் விஹாரி தான் நீக்கப்படுவார் என்பதும், புஜாரா-ரஹானே தொடர்ந்து ஆடுவார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது.