2007 டி20 உலக கோப்பையில் இளம் வீரர்களுக்கு வழிவிடும் விதமாக, டிராவிட்டின் கருத்தை ஏற்றுக்கொண்டு, சச்சினும் கங்குலியும் ஆடாத சம்பவம் குறித்து அணியின் முன்னாள் மேலாளர் ரால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார். 

2007 டி20 உலக கோப்பை இந்திய அணிக்கு மிக முக்கியமான வெற்றி. இந்திய கிரிக்கெட் அணி புதிய அத்தியாயத்தில் காலெடுத்து வைத்த வரலாற்று சம்பவம் அது. 2007 ஒருநாள் உலக கோப்பையில் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி, லீக் சுற்றுடன் வெளியேறியது. 

அந்த உலக கோப்பை தோல்வி, இந்திய அணிக்கு பெரும் அடியாக விழுந்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலக, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றார். 

தோனியின் தலைமையில் ரோஹித் சர்மா, யூசுஃப் பதான், ராபின் உத்தப்பா, ஸ்ரீசாந்த், ஜோஹிந்தர் சர்மா என இளம் படையினர், 2007 டி20 உலக கோப்பையில் களம் கண்டனர். அனுபவமான ஆஸ்திரேலியா, அதிரடி பாகிஸ்தான் ஆகிய அணிகளை எல்லாம் வீழ்த்தி டி20 உலக கோப்பையை வென்றது இளம் இந்திய அணி. 

அந்த உலக கோப்பையில், இளம் வீரர்களுக்கு சீனியர் வீரர்கள் வாய்ப்பளித்த சம்பவம் குறித்து, அப்போதைய அணி மேலாளர் லால்சந்த் ராஜ்புத் பகிர்ந்துள்ளார். 

ஸ்போர்ட்ஸ்கீடாவிற்கு அளித்த பேட்டியில் பேசிய லால்சந்த் ராஜ்புத், 2007 டி20 உலக கோப்பையில் நாம் ஆட வேண்டாம் என்று சச்சின் மற்றும் கங்குலியிடம் ராகுல் டிராவிட் கூறினார். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டனர். இங்கிலாந்து தொடரை முடித்துவிட்டு, ராகுல் டிராவிட் தலைமையிலான அணி, நேரடியாக ஜோஹன்னஸ்பர்க்கிற்கு(தென்னாப்பிரிக்கா) வந்தது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக அந்த தொடரில் சச்சின், டிராவிட், கங்குலி ஆகிய மூன்று சீனியர் வீரர்களும் அந்த உலக கோப்பை தொடரில் ஆடவில்லை. இளம் இந்திய அணி அந்த உலக கோப்பையை வென்றது. சச்சின் தனது நீண்ட கெரியரில் உலக கோப்பையை வெல்லவே இல்லை என்று வருத்தம் அவ்வப்போது வருத்தம் தெரிவிப்பார். கடைசியில் அவரும் 2011ல் உலக கோப்பையை தூக்கிவிட்டார் என்று லால்சந்த் ராஜ்புத் தெரிவித்துள்ளார்.