IPL 2023: ரஹ்மானுல்லா குர்பாஸ் வேற லெவல் பேட்டிங்.. சதம் மட்டும் மிஸ்ஸிங்..! ஆண்ட்ரே ரசல் அதிரடி ஃபினிஷிங்
ஐபிஎல் 16வது சீசனில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்து, 180 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் கேகேஆர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணி:
ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வீஸ், ஷர்துல் தாகூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷுவா லிட்டில்.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் அதிரடியாக தொடங்கினார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறிய அவர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷர்துல் தாகூர்(0), வெங்கடேஷ் ஐயர்(11), கேப்டன் நிதிஷ் ராணா(4) ஆகிய மூவரும் ஏமாற்றமளிக்க, ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்தார்.
ஆஃப்கான் வீரரான குர்பாஸ், அவரது சக வீரரான ரஷீத் கானின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 39 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து, சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் 19 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் அடித்து ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்தார். 20 ஓவரில் 179 ரன்கள் அடித்த கேகேஆர் அணி, 180 ரன்கள் என்ற இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.