உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர், பவுலிங் என அனைத்துமே ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. 2 இடங்களுக்கான வீரர்கள் மட்டுமே இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 

இந்திய அணி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகச்சிறந்த பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது கூடுதல் பலம். உலக கோப்பையில் இந்திய பவுலர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரும் நன்றாக செட் ஆகிவிட்டது. ரோஹித், தவான், கோலி என முதல் மூன்று வீரர்கள் அணிக்கு வலு சேர்க்கின்றனர். டாப் ஆர்டர் வலுவாக இருப்பதே இந்திய அணியின் மிகப்பெரிய பலம். நான்காம் இடத்திற்கு சரியான வீரரை தேர்வு செய்ய நீண்ட தேடுதல் படலம் நடைபெற்றது. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ராயுடு, தினேஷ் கார்த்திக் என பல வீரர்களை அந்த வரிசையில் களமிறக்கி பரிசோதித்தது இந்திய அணி நிர்வாகம். இவர்களில் தேறியவர் ராயுடுதான். அவர்தான் அந்த வரிசையில் ஓரளவிற்கு நன்றாக ஆடி நம்பிக்கையளித்தார். இதையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி சிறப்பாகவே ஆடினார் ராயுடு.

ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆஸ்திரேலிய தொடர் ஆகியவற்றில் நன்றாக ஆடினார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இக்கட்டான சூழலில் அவர் அடித்த 90 ரன்கள் மிகவும் சிறப்பும் முக்கியத்துவமும் வாய்ந்தது. அந்த இன்னிங்ஸ் அவரது சிறப்பான பேட்டிங்குகளில் ஒன்று. அதன்பிறகு அவர் நான்காம் வரிசையை உறுதி செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது. 

ஆனால் இதற்கிடையே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறிய ஒரு கருத்து கடும் விவாதத்துக்கு உள்ளானது. அதாவது தேவைப்பட்டால் விராட் கோலி நான்காம் வரிசையில் களமிறக்கப்படுவார் என்று சாஸ்திரி தெரிவித்தார். ராகுலை மூன்றாம் வரிசையில் இறக்கிவிட்டு கோலி 4ம் வரிசையில் இறக்கப்படுவார் என்ற கருத்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதல் மூன்று வீரர்கள் நன்றாக செட் ஆகிவிட்ட நிலையில், அதை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்பது சில முன்னாள் வீரர்களின் கருத்து.

நான்காம் வீரருக்கான விவாதம் இன்னும் முடிந்தபாடில்லை. நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடி தனது திறமையை ராயுடு நிரூபித்தவிட்ட பிறகும் நான்காம் வரிசை குறித்து இன்னும் விவாதிப்பதும் சில திட்டங்களை வைத்திருப்பதும் அநியாயம் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டு வைத்திருக்கும் ரஹானே, மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்கும் முனைப்பில் உள்ளார். வெளிநாடுகளில் நல்ல ரெக்கார்டை வைத்துள்ள ரஹானே, கடைசியாக 2018ம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு ஒருநாள் போட்டிகளில் ரஹானே ஆடவில்லை. இங்கிலாந்து தொடர், ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரஹானே, இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையே ரஹானேவை அணியில் எடுப்பது குறித்து பரிசீலித்துவருவதாக தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார். அதனால் இந்தியாவில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் ரஹானே சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஹானே அணியில் இல்லை. 

தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டாலும், இன்னும் கூட, உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார் ரஹானே. உலக கோப்பை அணியில் இடம்பெறுவதற்கு, ஐபிஎல்லை தனது கடைசி வாய்ப்பாக கருதும் ரஹானே, ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி உலக கோப்பை அணியில் இடம்பெறும் நம்பிக்கையில் உள்ளார். உலக கோப்பை அணியில் தன்னை புறக்கணிக்க முடியாத அளவிற்கு ஐபிஎல்லில் ஆட உள்ளதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நான்காம் வரிசையில் ஆடிய அனுபவம் பெற்றவர் ரஹானே. 2015ம் ஆண்டு உலக கோப்பையில் கூட ரஹானே தான் நான்காம் வரிசையில் களமிறங்கினார்.

தனக்கு சீரான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதை பறைசாற்றும் விதமாக, ஒருநாள் அணியில் சீரான வாய்ப்பு வழங்குவதற்குத் தான் தகுதியான வீரர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.