யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பிறகு, அவர் ஆடிவந்த நான்காம் இடத்தை யாராலும் நிரப்பமுடியவில்லை. நிரப்புமளவிற்கு எந்த வீரருக்கும் வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை. இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு நீண்டகால நிரந்தர தீர்வை கருத்தில்கொள்ளாமல், பரிசோதனை முயற்சி என்கிற ஏராளமான வீரர்களை இறக்கிவிட்டு, கடைசியில் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட ராயுடுவையும் உலக கோப்பையில் கழட்டிவிட்டது தேர்வுக்குழு. 

நிரந்தர தீர்வை கருத்தில்கொண்டு வீரர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்காமல் அந்தந்த நேரத்திற்கு என்ன தேவையோ அதற்கேற்ப அணி தேர்வு இருந்ததுதான் அதற்குக் காரணம். 

உலக கோப்பைக்கு முன், நான்காம் வரிசை வீரருக்கான நீண்ட தேடுதல் படலம் நடத்தப்பட்டது. ரஹானே, ரெய்னா, மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ராயுடு என பலர் அந்த வரிசையில் பரிசோதிக்கப்பட்டு, இறுதியில் ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் உலக கோப்பை அணியில் அவர் கழட்டிவிடப்பட்டு விஜய் சங்கர் எடுக்கப்பட்டார். உலக கோப்பையிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்னை எதிரொலித்தது. இந்திய அணி உலக கோப்பை அரையிறுதியில் தோற்று வெளியேறியது. 

உலக கோப்பைக்கு பின்னர் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தே நான்காம் வரிசை வீரரை உறுதி செய்யும் முனைப்பில் இந்திய அணி நிர்வாகம் உள்ளது. 

எனவே இந்த தொடருக்கான ஒருநாள் அணியில் மனீஷ் பாண்டே மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் இல்லாததால் இவர்கள் இருவருக்குமே அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லது இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம். 

ஆகமொத்தத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு மனீஷ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரை வைத்து தீர்வு காணும் முனைப்பில் இந்திய அணி நிர்வாகம் உள்ள நிலையில், ரஹானே தன்னால் இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணமுடியும் என உறுதியாக நம்புகிறார். 

ரஹானே ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து கழட்டிவிடப்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் ஆடிவருகிறார். டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக உள்ளார் ரஹானே. இந்நிலையில், எனக்கு ரொம்ப பிடித்த பேட்டிங் வரிசை 4ம் வரிசைதான். 4ம் வரிசையில் நான் ரசித்து, அனுபவித்து பேட்டிங் ஆடுவேன் என்று ரஹானே தெரிவித்துள்ளார். 

இந்திய அணி மீண்டும் நான்காம் வரிசைக்கான தேடுதல் படலத்தில் இறங்கியுள்ள நிலையில், ரஹானே இவ்வாறு தெரிவித்துள்ளார். உலக கோப்பை அணியில் ரஹானேவை நான்காம் வரிசையில் இறக்கியிருக்கலாம் என்றும் அவரை அணியில் எடுக்காததற்கு கடும் அதிருப்தியும் தெரிவித்திருந்தார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். பிசிசிஐ அதிகாரி ஒருவரே, இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு ரஹானே நல்ல தீர்வாக இருப்பார் என தெரிவித்திருந்தார். 

நல்ல பேட்டிங் டெக்னிக்கை கொண்ட ரஹானே, வெளிநாடுகளில் நல்ல பேட்டிங் ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.