தோனிக்கு பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், இவர் தான் இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பர் என அணி நிர்வாகத்தால் உறுதியும் செய்யப்பட்டார். அதனால் அவருக்கு அனைத்துவிதமான போட்டிகளிலும் அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. 

ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என ஃபார்மட் பேதமின்றி அனைத்துவிதமான போட்டிகளிலும் ஆடவைக்கப்பட்டார். அவர் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் என இரண்டிலுமே சொதப்பிய போதிலும் கூட, அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து தொடர் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. 

ஆனால் அதை ரிஷப் பண்ட் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. பேட்டிங்கில் மட்டுமல்லாது விக்கெட் கீப்பிங்கிலும் தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பினார். அவரது சொதப்பலான விக்கெட் கீப்பிங் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதோடு பாதிப்பாகவும் அமைந்தது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து டெஸ்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு, அனுபவ விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா அணியில் எடுக்கப்பட்டார். 

டெஸ்ட் அணியில் இடத்தை இழந்த ரிஷப் பண்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளிலும் கேஎல் ராகுலிடம் இடத்தை இழந்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் சொதப்பிவந்த ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார். அதனால் அந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த ராகுல், சிறப்பாக செய்ததையடுத்து அவரே அதன்பின்னர் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பிங் செய்தார். 

கேஎல் ராகுலே விக்கெட் கீப்பிங்கும் செய்வதால் கூடுதலாக ஒரு தரமான பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க ஏதுவாக இருந்ததால், அணி நிர்வாகம் கேஎல் ராகுலையே நியூசிலாந்து தொடரிலும் விக்கெட் கீப்பராக செயல்படவைத்தது. அந்த வாய்ப்பை இருகரம் நீட்டி பற்றிக்கொண்ட ராகுல், பேட்டிங் மற்றும் கீப்பிங் இரண்டையுமே அருமையாக செய்ததால், ரிஷப் பண்ட் அப்படியே ஓரங்கட்டப்பட்டுவிட்டார். அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பே கிடைப்பதில்லை. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், அதிலும் அவர் ஆடுவதற்கான வாய்ப்பில்லை. இந்நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய அணியின் சீனியர் வீரர் ரஹானே, எப்பேர்ப்பட்ட சறுக்கல்களையும் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும். எப்போதுமே பாசிட்டிவாக இருந்து, தொடர்ந்து முயற்சி செய்வதுடன், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வளர வேண்டும். சீனியர் அல்லது ஜூனியர் என யாராக இருந்தாலும் இது பொருந்தும். 

யாருமே களத்தில் இறங்கி ஆடாமல், பென்ச்சில் உட்கார விரும்பமாட்டார்கள். ஆனால் அணி நிர்வாகம் என்ன முடிவெடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ரிஷப் பண்ட்டை பொறுத்தமட்டில் இப்போதைக்கு, எந்தவிதமான சறுக்கல்களையும் அணி நிர்வாகத்தி முடிவுகளையும் ஏற்றுக்கொள்வது மிக முக்கியம். ஆட்டத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி கடுமையாக உழைக்க வேண்டும். ரிஷப் பெரும்பாலும் 6 அல்லது 7வது வரிசையில் ஆடுகிறார். எனவே அந்த வரிசையில் அவரது ரோல் என்னவென்பதை உணர்ந்து அதன்படி செயல்பட்டாலே போதும் என ரஹானே ஆலோசனை வழங்கியுள்ளார்.