தென்னாப்பிரிக்க அணிக்கு கிடைத்த ஃபாஸ்ட் பவுலிங் வரப்பிரசாதம் காகிசோ ரபாடா. 2014ம் ஆண்டு தென்னாப்பிரிக்க டி20 அணியில் அறிமுகமான ரபாடா, 2015ல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளிலும் அறிமுகமானார். 

சர்வதேச 6 ஆண்டுகளாக ஆடிவரும் ரபாடா, சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் முதன்மையானவராக திகழ்கிறார். 150 கிமீ வேகத்திற்கு மேல் அசால்ட்டாக வீசக்கூடிய ரபாடா, இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 197 விக்கெட்டுகளையும் 75 போட்டிகளில் ஆடி 117 விக்கெட்டுகளையும் 23 டி20 போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

ஐசிசி ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 தரவரிசைகளிலும் 5ம் இடத்தில் உள்ளார் ரபாடா. ரபாடா மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர் என பல முன்னாள் ஜாம்பவான்கள் புகழ்ந்துவருகின்றனர். முன்னாள் ஜாம்பவான்கள் ராகுல் டிராவிட் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகிய இருவருமே, தற்கால பவுலர்களில் ரபாடா தான் தங்களுக்கு டஃப் கொடுக்க முடியும் என்று கூறி ரபாடாவை பெருமைப்படுத்தினர். 

ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணிக்காக ஆடிவரும் ரபாடா, 13வது சீசனில் ஆட ஆர்வமாக இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தலால், கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே இல்லாததால் கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், ரபாடா, இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார். 

அப்போது, கடந்த கால பேட்ஸ்மேன்களில் யாருக்கு பந்துவீச வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, கெவின் பீட்டர்சன், சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகிய நால்வருக்கும் பந்துவீச விரும்புவதாக ரபாடா தெரிவித்தார்.