ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் பிப்ரவரி 18ம் தேதி நடந்தது. அதிரடி வீரரும் ஃபினிஷருமான க்ளென் மேக்ஸ்வெல்லை கழட்டிவிட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி, ஃபினிஷர் ரோலுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஷாருக்கானை ஏலத்தில் எடுத்தது.

தமிழ்நாட்டை சேர்ந்த அதிரடி வீரரும் ஃபினிஷருமான ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. கேஎல் ராகுல், மயன்க் அகர்வால், கெய்ல் என டாப் ஆர்டர் வலுவாகவுள்ள பஞ்சாப் அணிக்கு பூரானை தவிர மிடில் ஆர்டரில் தரமான அதிரடி வீரர் இல்லை. 

அந்தவகையில், ஷாருக்கான் பஞ்சாப் அணியின் அந்த குறையை தீர்ப்பார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு போட்டிகளில் அபாரமாக ஆடி ஸ்கோர் செய்து, தமிழ்நாடு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார் ஷாருக்கான்.

கடந்த ஐபிஎல் சீசனிலேயே ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கான், கடந்த ஏலத்தில் விலைபோகாத நிலையில், தனது தொடர்ச்சியான கடும் உழைப்பு மற்றும் சிறப்பான பேட்டிங்கால் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணியால் ரூ.5.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஷாருக்கானை எடுத்தது குறித்து பேசியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ சதீஷ் மேனன், ஷாருக்கான் மிகச்சிறந்த திறமைசாலி. உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவரும் வீரர். சையத் முஷ்டாக் அலி தொடரில் அபாரமாக ஆடினார். நல்ல ஃபினிஷரான ஷாருக்கான், எங்கள் அணியில் நீண்டகாலம் நீடிப்பார் என்று சதீஷ் மேனன் தெரிவித்தார்.