விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அபார சதம் மற்றும் மயன்க் அகர்வாலின் இரட்டை சதம் ஆகியவற்றால் 502 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்களை குவித்தது. 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விரைவில் ஸ்கோர் செய்துவிட்டு தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் ஆட விட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதை நன்கு உணர்ந்து அடித்து ஆடிய ரோஹித் சர்மா இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்தார். ரோஹித்துக்கே டஃப் கொடுக்கும் வகையில் புஜாரா ஆடியதுதான் வியப்பான சம்பவம். முதல் 50-60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். 

முதல் 60 பந்துகளில் ஒற்றை இலக்க ரன் அடித்திருந்த புஜாரா, அடுத்த 88 பந்துகளில் 70 ரன்களுக்கு மேல் அடித்தார். 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்தார். ரோஹித் ஒருபுறம் அடிக்க, புஜாராவும் அதிரடியில் இறங்கியதும் தென்னாப்பிரிக்க பவுலர்கள் திகைத்தனர். ரோஹித்துடன் சேர்ந்து புஜாராவின் அதிரடியான பேட்டிங் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பலப்படுத்தியது. அதன்பின்னர் கோலி, ரஹானே, ஜடேஜா ஆகியோரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 

இரண்டாவது இன்னிங்ஸை 323 ரன்களுக்கு டிக்ளேர் செய்த இந்திய அணி, 395 ரன்களை தென்னாப்பிரிக்காவிற்கு இலக்காக நிர்ணயித்தது. 191 ரன்களுக்கே ஆல் அவுட்டான தென்னாப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் புஜாராவின் பேட்டிங் ரொம்ப முக்கியமானது. இந்நிலையில், அந்த இன்னிங்ஸ் குறித்து பேசிய புஜாரா, நான் பேட்டிங் அட வந்ததும், மறுமுனையில் ரோஹித் ஆடிய ஷாட்டுகளை பார்த்து, அணியின் ஸ்கோர் நல்ல வேகத்தில் உயர்வதை உணர்ந்தேன். ரோஹித் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்ததால்தான் நான் எனது அதிரடியை தொடங்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டேன்.

அந்த ஆடுகளத்தில் வேறு யாராலுமே ரோஹித் ஆடிய ஷாட்டுகளை ஆடமுடியாது. உணவு இடைவேளைக்கும் டீ பிரேக்கிற்கும் இடையேயான எங்களது பார்ட்னர்ஷிப் முக்கியமானது. ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேனாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் எனது ஆட்டத்தை மேம்படுத்தி கொள்ள ரோஹித்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. அதிலும் ரோஹித் சிக்ஸர் அடிப்பது என்னை வியக்கவைத்தது என்று புஜாரா தெரிவித்தார்.