இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி ரத்தான நிலையில், எஞ்சிய 2 போட்டிகளிலும் வென்றால்தான் தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வென்று இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

எனவே இலங்கை அணி இந்த தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது. கடைசி போட்டியில் இலங்கை அணி வென்றால், தொடரை சமன் செய்ய முடியும். ஆனால் இந்திய அணி இருக்கும் ஃபார்மிற்கு, இலங்கை வெற்றி பெறுவது சாத்தியமே இல்லாத விஷயம். 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி 10ம் தேதி பூனேவில் நடக்கவுள்ளது. அந்த போட்டியில் ஆடும் இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஏனெனில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அதனால் இரண்டாவது டி20 போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த போட்டியிலும் களமிறங்கும். 

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, பும்ரா.