இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது. இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. 

2வது டெஸ்ட் போட்டி நடந்த சவுத்தாம்ப்டனில் தான் 3வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது. சவுத்தாம்ப்டனில் தொடர் மழையால் தான் 2வது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸே முடியாமல் டிரா ஆனது. மொத்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட்டும் அங்கே தான் நடக்கவுள்ளது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியில் ஃபவாத் ஆலம் நீக்கப்பட்டு ஷதாப் கான் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம். ஆனால் இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது; மாற்றம் செய்வதற்கான அவசியமும் இல்லை. 

பேட்டிங் ஆர்டர்: ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் கிராவ்லி, ஜோ ரூட், ஓலி போப் மற்றும் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர். ஆல்ரவுண்டர்களாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகிய இருவரும் ஸ்பின்னராக டோமினிக் பெஸ்ஸும், ஃபாஸ்ட் பவுலர்கள் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆடுவார்கள். 

ஜோஃப்ரா ஆர்ச்சரை அணியில் எடுத்தால், சாம் கரன் - கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரில் ஒருவரை நீக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருவரும் ஃபாஸ்ட் பவுலிங் வீசுவதுடன், பேட்டிங்கும் நன்றாக ஆடுவார்கள் என்பதால், அவர்கள் நீக்கப்பட வாய்ப்பில்லை. எனவே 2வது போட்டியில் இறங்கிய அதே காம்பினேஷனுடன் தான் இங்கிலாந்து அணி களமிறங்கும்.

உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜாக் க்ராவ்லி, ஜோ ரூட்(கேப்டன்), ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.