ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்தது. சவுத்தாம்ப்டனில் நடந்த அந்த தொடரை 2-1 என இங்கிலாந்து அணி வென்றது.

இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக, அந்த அணியின் நிரந்தர ஒருநாள் தொடக்க வீரர்களான ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களமிறங்குவார்கள். அடுத்தடுத்த பேட்டிங் ஆர்டரில் ஜோ ரூட், கேப்டன் மோர்கன், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆடுவார்கள் என்பதால், டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி அசத்திய டேவிட் மாலனுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை.

பென் ஸ்டோக்ஸ் அவரது வீட்டிற்கு சென்றுள்ளதால் அவர் அணியில் இல்லை. எனவே ஆல்ரவுண்டர்களாக மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கரன் ஆகியோரும் ஃபாஸ்ட் பவுலர்களாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் உட் ஆகியோரும் ஆடுவார்கள். ஸ்பின்னராக ரிஸ்ட் ஸ்பின்னர் அடில் ரஷீத் ஆடுவார். அவருடன் இணைந்து ஸ்பின் பவுலிங் வீச மொயின் அலி இருக்கிறார். எனவே இந்த காம்பினேஷனுடன் இங்கிலாந்து அணி களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயன் மோர்கன்(கேப்டன்), ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், சாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் உட்.


 
இங்கிலாந்து அணிக்கு நிகரான பலத்துடன் உள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய பேட்ஸ்மேன்களும் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரியும் மிடில் ஆர்டரில் மிரட்டல் வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷும் இறங்குவார்கள். மிட்செல் மார்ஷ் கடைசி டி20 போட்டியில் பொறுப்பாக பேட்டிங் ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். எனவே மார்கஸ் ஸ்டோய்னிஸுக்கு பதிலாக அவர்தான் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய நால்வரும் ஸ்பின்னராக ஆடம் ஸாம்பாவும் ஆடுவார் என எதிர்பார்க்கலாம். க்ளென் மேக்ஸ்வெல் பார்ட் டைம் ஸ்பின் பவுலிங்கும், மிட்செல் மார்ஷ் மிதவேகப்பந்து வீசக்கூடியவர் என்பதால், இவர்கள் இருவரும் தேவைப்பட்டால் பார்ட் டைம் பந்துவீசுவார்கள். 

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.