இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ அறிவிப்பை வெளியிட்டது. ஏராளமான முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தனர். 

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 2000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளராக நீண்ட நெடிய அனுபவம் கொண்ட டாம் மூடி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங்கும் விண்ணப்பித்துள்ளார். 

நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளருமான மைக் ஹெசனும் விண்ணப்பித்துள்ளார். இலங்கை ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கவுள்ளதாக தகவல்கள் பரவின. ஆனால் ஜெயவர்தனே அந்த பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை. 

ஜாண்டி ரோட்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கும் இந்திய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் வெங்கடேஷ் பிரசாத் பவுலிங் பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பித்துள்ளனர். 

பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு யார் யார் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவலும் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீன் ஆம்ரே மட்டும்தான் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். ரஹானே, ரெய்னா, உத்தப்பா ஆகிய சிறந்த வீரர்களுக்கு பிரவீன் ஆம்ரே பயிற்சியளித்திருக்கிறார். எனவே அவருக்கான வாய்ப்பு பிரகாசமான வாய்ப்பு இருந்தது. இந்நிலையில் பேட்டிங் பயிற்சியாளருக்கான போட்டியில் மற்றொரு முன்னாள் வீரரான விக்ரம் ரத்தோரும் இணைந்துள்ளார். விக்ரம் ரத்தோரும் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு இவர்கள் இருவருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.