சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவது என்பது, அவரை எதிர்த்து ஆடிய ஒவ்வொரு பவுலரின் கனவாக இருக்கும். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனை வீழ்த்துவது என்பது பவுலர்களின் கனவாக இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

அதுவும் இளம் பவுலர்களுக்கு சச்சின் டெண்டுல்கரின் விக்கெட் பெரிய உத்வேகத்தையும் நம்பிக்கையையும் அளிக்கும். அந்தவகையில், சச்சின் டெண்டுல்கரை ஐபிஎல்லில் அவுட்டாக்கிய சம்பவம் குறித்து, ஸ்பின் பவுலர் பிரக்யான் ஓஜா பகிர்ந்துள்ளார்.

விஸ்டனுக்கு அளித்த பேட்டியில், 2009 ஐபிஎல்லில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக தான் ஆடியபோது, எதிரணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான சச்சின் டெண்டுல்கரை வீழ்த்திய சம்பவம் குறித்து மனம் திறந்துள்ளார். 

அதுகுறித்து பேசிய பிரக்யான் ஓஜா, டர்பனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டி நடப்பதற்கு முன், எங்கள் அணி(டெக்கான் சார்ஜர்ஸ்) உரிமையாளர்களில் ஒருவர் என்னிடம் வந்து, நீ சச்சினை அவுட்டாக்கினால் உனக்கு ஸ்பெஷல் கிஃப்ட் தருவேன் என்று கூறினார். அவர் எனக்கு நல்ல பழக்கமானவர் என்பதால் என்னை பற்றி நன்றாக தெரியும். என்னிடம் வந்து சச்சினை அவுட்டாக்கினால் கிஃப்ட் தருவதாக கூறினார்.

எனக்கு வாட்ச்கள் என்றால் அளாதி ப்ரியம். அதனால், நான் சச்சினை வீழ்த்தினால், எனக்கு வாட்ச் வாங்கி தருகிறீர்களா என்று கேட்டேன். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சச்சினை வீழ்த்தினேன். அணி உரிமையாளரும் வாக்களித்ததை போலவே வாட்ச்சை கிஃப்ட்டாக வழங்கினார். சச்சின் டெண்டுல்கரை வீழ்த்தியது ரொம்ப ஸ்பெஷலானது. டெண்டுல்கரின் விக்கெட் மிகுந்த தன்னம்பிக்கையையும் யாருக்கு எதிராகவும் ஆடமுடியும் என்ற தைரியத்தையும் கொடுத்ததாக ஓஜா தெரிவித்தார். 

அந்த குறிப்பிட்ட போட்டியில் ஓஜா, சச்சின், டுமினி மற்றும் தவான் ஆகிய மூவரின் விக்கெட்டையும் வீழ்த்தி, டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அந்த போட்டியின் ஆட்டநாயகனும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.