ஆஷஸ் தொடரில் ஸ்மித் அபாரமாக ஆடிவருகிறார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்து மீண்டும் அணிக்கு திரும்பிய ஸ்மித், முன்பை விட வேற லெவலில் பேட்டிங் ஆடி அசத்திவருகிறார். 

ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து அசத்தினார். இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களில் ஆட்டமிழந்து 8 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அந்த இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிபட்டதால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. அந்த காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட்டிலும் ஆடவில்லை. 

காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியுடன் நான்காவது டெஸ்ட்டில் ஆடிய ஸ்மித், முதல் இன்னிங்ஸில் தனது அருமையான பேட்டிங்கால் இரட்டை சதமடித்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக ஆடி 82 ரன்களை குவித்தார். விரைவில் ரன்களை குவித்துவிட்டு இங்கிலாந்து அணியை இரண்டாவது இன்னிங்ஸ் ஆடவைக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடியதால் சதத்தை தவறவிட்டு 82 ரன்களில் ஆட்டமிழந்தார். இல்லையெனில் அதிலும் சதமடித்திருப்பார். 

ஸ்மித் தான் இரு அணிகளுக்கும் இடையேயான வித்தியாசமாக திகழ்ந்து போட்டியின் முடிவை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக திகழ்கிறார். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு அவர் காரணமாக திகழ்ந்ததை அடுத்து, அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே ஆர்ச்சர் அணியில் எடுக்கப்பட்டார். 

ஆனால் ஆர்ச்சரால் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ஸ்மித்துக்கு பவுன்ஸரை போட்டு அவரை வீழ்த்த முடிந்ததே தவிர ஆர்ச்சரால் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. நான்காவது போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஸ்மித்தும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருந்தார். ஆர்ச்சரால் தனது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்பதை சுட்டிக்காட்டி ஸ்மித் பேசியிருந்தார். அதற்கு, ஸ்மித்தை வீழ்த்துவதெல்லாம் தனக்கு பெரிய விஷயமல்ல என்கிற ரீதியாக ஆர்ச்சர் பேசியிருந்தார். 

ஆர்ச்சரால் வாயில்தான் சொல்ல முடிந்ததே தவிர, ஸ்மித்தை வீழ்த்த முடியவில்லை. நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் நங்கூரமிட்டு அபாரமாக பேட்டிங் ஆடி 211 ரன்களை குவித்தார் ஸ்மித். ஸ்மித்தை ஆர்ச்சரால் அசைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அந்த இன்னிங்ஸில் ஸ்மித்தின் விக்கெட்டை அல்ல, வேறு யாருடைய விக்கெட்டையுமே ஆர்சச்ரால் வீழ்த்த முடியவில்லை. 

எனவே ஸ்மித்தை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணி பார்க்கப்பட்ட ஆர்ச்சராலும் அந்த அணிக்கு பயனில்லை. ஸ்மித்தை வீழ்த்துவதே இங்கிலாந்து அணிக்கு இயலாத காரியமாகிவிட்டது. அவராக விக்கெட்டை கொடுத்தால் மட்டும்தான் உண்டு. பவுலர்கள் அவர்களாக வீழ்த்தவே முடியவில்லை. 

எப்படி பந்து போட்டாலும் அபாரமாக ஆடிவிடுகிறார். அவரது பேட்டிங் திறமையும் கவனக்குவிப்பும் அனைவரையும் வியக்கவைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் ஆகிய ஜாம்பவான்கள் ஸ்மித்தை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளனர். 

ஆஷஸ் தொடரில் போட்டி, ஆஸ்திரேலிய அணிக்கும் இங்கிலாந்துக்கும் என்று சொல்வதை விட, ஸ்மித்துக்கும் இங்கிலாந்து அணிக்கும் என்று சொல்லுமளவிற்கு இருக்கிறது ஸ்மித்தின் ஆதிக்கம். ஸ்மித்தை வீழ்த்தவே முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறிவரும் நிலையில், நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸுக்கு பிறகு, ஸ்மித்தை எப்படி வீழ்த்தலாம் என்று ஒரு ஆலோசனையை பகிரங்கமாக வழங்கினார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 

ஸ்மித்தை வீழ்த்துவது குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், ஸ்மித் ஒரு ஜீனியஸ். அவர் வேற லெவலில் பேட்டிங் ஆடிவருகிறார். அவரது கவனக்குவிப்பு வியப்பிற்குரியது. அவரது கடைசி 99 இன்னிங்ஸ்களில் வெறும் 9 முறை மட்டுமே எல்பிடபிள்யூ ஆகியிருக்கிறார். எனவே ஸ்டம்புக்கு நேராக பந்து போட்டால் ஸ்மித்தை வீழ்த்த முடியாது. வேண்டுமென்றால் ஆஃப் திசையில் பந்துவீசி அவரை வீழ்த்த முயற்சிக்கலாம் என்று பாண்டிங் தெரிவித்தார். 

ஆனால் முதல் போட்டியிலேயே இதை இங்கிலாந்து பவுலர்கள் முயற்சி செய்து பார்த்தனர். ஆஃப் திசையில் வீசப்பட்ட பந்துகளை அருமையாக மிஸ் செய்தார் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பாண்டிங்கின் ஆலோசனையை முழுமையாகவும் தொடர்ச்சியாகவும் ஸ்மித்துக்கு எதிராக முயற்சித்திருந்தால் வாய்ப்பிருந்திருக்கிறது. ஆனால் அதையும் அவர்கள் சரியாக செய்யவில்லை.