ஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றிருந்த நிலையில், நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளுமே வெற்றி வெற்றி கட்டாயத்தில் நேற்றைய போட்டியில் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்கள் அடித்தது. 

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியும் சரியாக 162 ரன்களை எடுத்ததால் போட்டி டிரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றதோடு புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தையும் பிடித்தது. 

மும்பை இந்தியன்ஸ் அணியின் நீண்டகால வெற்றி நாயகனாக திகழும் பொல்லார்டின் அர்ப்பணிப்பான ஃபீல்டிங், நேற்றைய போட்டியில் அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. 3 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் பொல்லார்டு ஆற்றியிருக்கும் பங்களிப்பு அளப்பரியது. 

பல அசாத்தியமான கேட்ச்களை அபாரமாக பிடித்துள்ளார். அந்தவகையில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 4வது ஓவரின் 5வது பந்தை சஹா அடிக்க, பவுண்டரியை நோக்கி சென்ற அந்த பந்தை மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்த பொல்லார்டு விரட்டி சென்றார். பந்து பவுண்டரியை நெருங்கும்போது காலால் மறைக்க முயன்றார். எனினும் பந்து காலில் பட்டும் கூட பவுண்டரிக்கு சென்றது. ஓடிய வேகத்தில் கட்டுப்படுத்த முடியாமல் பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பலகையை தாவிக்குதித்து அந்த பக்கம் விழுந்தார். பொல்லார்டு விழுந்ததைக் கண்டு வீரர்கள் அனைவருமே பதறினர். வீரர்கள் மட்டுமல்ல மைதானமே பதறியது எனலாம். 

விளம்பர பலகையை தாவிக்குதித்தாலும் அடிபடாத அளவிற்கு சாமர்த்தியமாக விழுந்தார். அதனால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பொல்லார்டின் அர்ப்பணிப்பான ஃபீல்டிங் வீடியோ இதோ..