விக்கெட் கீப்பர்கள் விவகாரத்தில் தேர்வுக்குழு பொறுமையாக இருப்பதில்லை என்று பார்த்திவ் படேல் தெரிவித்திருக்கிறார்.

தோனி கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் ஆடவில்லை. தோனி அணியில் இருந்ததால், 2005லிருந்து 15 ஆண்டுகளாக இந்திய அணியில் விக்கெட் கீப்பருக்கான சிக்கல் எதுவும் வந்ததில்லை. 

ஆனால் தோனிக்கு பின்னர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 2014ல் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், ரிதிமான் சஹா இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பராக இருக்கிறார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில், இந்திய அணியின் எதிர்கால விக்கெட் கீப்பராக அணி நிர்வாகத்தால் பார்க்கப்பட்ட  ரிஷப் பண்ட், சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்றதும் ஓரங்கட்டப்பட்டார். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்துவருகிறார். 

தோனி இந்திய அணியில் நிரந்தரமாவதற்கு முன்பும், விக்கெட் கீப்பர் விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் பொறுமை காத்ததில்லை என்பதை பறைசாற்றும் வகையில் தான் இப்போது பேசியிருக்கிறார். தோனிக்கு முன்பாகவே இந்திய அணியின் விக்கெட் கீப்பராக பார்த்திவ் படேல் இளம் வயதில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் தனது திறமையை நிரூபிக்க தவறிவிட்டதால் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கிற்கும் நடந்தது. 

ஆனால் தோனி தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அணியில் நிரந்தர இடம்பிடித்தார். இந்நிலையில், ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பார்த்திவ் படேல், விக்கெட் கீப்பர் விஷயத்தில் இந்திய அணி நிர்வாகம் பொறுமை காத்ததில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய பார்த்திவ் படேல், விக்கெட் கீப்பர் விவகாரத்தில் நாம் பொறுமை காப்பதில்லை. எல்லா போட்டிகளிலும் எல்லா தொடர்களிலும் சிறப்பாக ஆட வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. நான் தென்னாப்பிரிக்காவில் 2 டெஸ்ட்டில் ஆடினேன். அடுத்து இங்கிலாந்தில் தினேஷ் கார்த்திக் ஆடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தினேஷ் - சஹா இரண்டு பேருமே இல்லாததால் ரிஷப் பண்ட் ஆடினார் என்று பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். 

பார்த்திவ் பட்டியலிட்டதில், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் 2018ல் நடந்தவை. அதைத்தான் சுட்டிக்காட்டியுள்ளார் பார்த்திவ் படேல்.