உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், நான்காவது அணியாக நியூசிலாந்து அணி முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

பாகிஸ்தான் அணி அதன் கடைசி போட்டியில் இன்று வங்கதேசத்துடன் ஆடுகிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து தான் அரையிறுதிக்கு தகுதிபெறும். அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால் பாகிஸ்தான் அணி  சாத்தியமே இல்லாத அளவிற்கான வெற்றியை பெற்றாக வேண்டும். ஆனால் அதற்கு சாத்தியமே இல்லாததால் பாகிஸ்தான் தொடரை விட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது. 

இந்நிலையில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர் ஷோயப் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டிதான் மாலிக் கடைசியாக ஆடியது. அந்த போட்டியுடன் ஓரங்கட்டப்பட்ட மாலிக், அதன்பின்னர் அணியில் இடம்பெறவே இல்லை. இந்நிலையில், இந்த போட்டியிலும் மாலிக் சேர்க்கப்படவில்லை. ஹாரிஸ் சொஹைல், இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோர் தான் இந்த போட்டியிலும் மிடில் ஆர்டர்களாக ஆடுகின்றனர். கடந்த இரண்டு போட்டிகளில் ஆடிய அதே அணியுடன் தான் பாகிஸ்தான் களமிறங்கியுள்ளது. 

வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயத்தால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடாத மஹ்மதுல்லா இந்த போட்டியில் ஆடுகிறார். அதனால் சபீர் ரஹ்மான் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல ருபெல் ஹுசைன் நீக்கப்பட்டு மெஹிடி ஹசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் அணி:

ஃபகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அகமது(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹாரிஸ் சொஹைல், இமாத் வாசிம், ஷதாப் கான், முகமது அமீர், வஹாப் ரியாஸ், ஷாஹீன் அஃப்ரிடி.

வங்கதேச அணி:

தமீம் இக்பால், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், முஷ்ஃபிகுர் ரஹீம்(விக்கெட் கீப்பர்), லிட்டன் தாஸ், மஹ்மதுல்லா, மொசாடெக் ஹுசைன், முகமது சைஃபுதின், மெஹிடி ஹசன், மஷ்ரஃபே மோர்டசா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.