பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என இங்கிலாந்து அணி வென்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஜெயிக்க வாய்ப்பிருந்தும் மழையால் டிராவில் முடிந்தது. 

அதைத்தொடர்ந்து நடந்துவரும் டி20 தொடரின் முதல் போட்டியும் மழையால் முடிவில்லாமல் முடிந்தது. நேற்று மான்செஸ்டரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இங்கிலாந்து அணி 16.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை பெய்து ஆட்டத்தை கெடுத்தது. மழை தொடர்ந்ததால் போட்டி அத்துடன் கைவிடப்பட்டது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் பிடித்த அபாரமான கேட்ச் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஷதாப் வீசிய 15வது ஓவரின் 4வது பந்து, மொயின் அலியின் பேட்டில் பட்டு ரிஸ்வானிடம் சென்றது. ரிஸ்வான் அதை பிடிக்கவில்லை; ரிஸ்வானின் கையில் பட்டு எகிறியது. ஆனால் அதை அப்படியே விட்டுவிடாமல், பந்தை நன்கு கவனித்ததால், விட்ட பந்தை அபாரமாக ஒரு டைவ் அடித்து பிடித்தார் ரிஸ்வான். ரிஸ்வானின் கவனக்குவிப்பும் விக்கெட் கீப்பிங்கும் அபாரம். 

முகமது ரிஸ்வான் மிகச்சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். டெஸ்ட் போட்டிகளிலேயே அருமையாக செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்ததுடன், பாராட்டுகளையும் பெற்றார். இந்நிலையில், தொடர்ச்சியாக தனது சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் மிரட்டிவருகிறார் ரிஸ்வான்.