உலக கோப்பை தொடர் பாகிஸ்தானுக்கு படுமோசமாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் அணி இதுவரை ஆடிய 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. எனவே இனிமேல் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு வாய்ப்பேயில்லை. 

உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது பாகிஸ்தான் அணி. உலக கோப்பையில் ஒருமுறை கூட இந்திய அணியை வீழ்த்திராத பாகிஸ்தான் அணி, இந்த முறையாவது இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் இறங்கியது. ஆனால் கோலி தலைமையிலான வலுவான இந்திய அணியின் மீது எந்த வகையிலுமே பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. 

படுமோசமாக ஆடி படுதோல்வியடைந்தது பாகிஸ்தான். இதையடுத்து பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் வீரர்கள் வைத்து செய்யப்பட்டனர். 

குறிப்பாக கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி, ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த கேப்டன் சர்ஃபராஸை, மூளையில்லாத கேப்டன் என ஷோயப் அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு தலைவர் இன்சமாம் உல் ஹக்கை அணியின் மேனேஜர் இண்டிகாப் ஆலம் கடுமையாக விமர்சித்துள்ளார். அணி நிர்வாகத்தின் முடிவுகளில் தேர்வுக்குழு தலைவரான இன்சமாம் உல் ஹக்கின் குறுக்கீடுகள் அதிகம் இருக்கிறது போலும். அதனால்தான் இன்சமாமை கடுமையாக சாடியுள்ளார் ஆலம்.

இதுகுறித்து பேசியுள்ள ஆலம், 15 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்வதுடன் தேர்வுக்குழுவின் வேலை முடிந்துவிட்டது. அதன்பின்னர் ஆடும் லெவனில் யாரை இறக்க வேண்டும் என்பதை பற்றி கேப்டன், கோச் மற்றும் அணி நிர்வாகம் முடிவு செய்துகொள்ளும். அப்படியிருக்கையில், இன்சமாம் உல் ஹக் எதற்காக அணி நிர்வாகத்துடன் இங்கிலாந்தில் இருக்க வேண்டும். அவர் இங்கிலாந்து செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏன் அனுமதித்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். 

அணி நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் இன்சமாமின் தலையீடுகளும் குறுக்கீடுகளும் இருக்கிறது போலும். எனவே தான் ஆலம் இன்சமாமின் இருப்பு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.