இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஷான் மசூத் அபாரமாக ஆடி சதமடித்து, 156 ரன்களை குவித்து பாகிஸ்தான் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். பாபர் அசாம் 69 ரன்களையும் ஷதாப் கான் 46 ரன்களையும் அடித்தனர். மற்ற யாருமே இரட்டை இலக்கத்தை கூட எட்டவில்லை. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிப்ளி மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாக, ஜோ ரூட்டும் 16 ரன்களில் நடையை கட்டினார். ஓலி போப் பொறுப்புடன் ஆடி 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, பட்லர் 38 ரன்கள் மற்றும் கிறிஸ் வோக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்டூவர்ட் பிராட் வழக்கம்போல கடைசி நேரத்தில் சில பவுண்டரிகளை அடித்து வேகமாக 29 ரன்களை சேர்க்க, முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி. 

பாகிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக யாசிர் ஷா 4 விக்கெட்டுகளையும் முகமது அப்பாஸ் மற்றும் ஷதாப் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 109 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியில், முதல் இன்னிங்ஸில் ஸ்கோர் செய்த ஷான் மசூத் மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவருமே இந்த முறை ஏமாற்றினர். முதல் இன்னிங்ஸில் சதமடித்து பெரிய இன்னிங்ஸை ஆடிய ஷான் மசூத், 2வது இன்னிங்ஸில் ஸ்டூவர்ட் பிராடின் பவுலிங்கில் டக் அவுட்டானார். 

மற்றொரு தொடக்க வீரரான அபித் அலி 20 ரன்களிலும் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 5 ரன்களிலும் ஆட்டமிழக்க, கேப்டன் அசார் அலி 18 ரன்களில் நடையை கட்டினார். அபித் அலி டோமினிக் பெஸ்ஸின் சுழலில் அவுட்டாக, பாபர் அசாம் மற்றும் அசார் அலியை கிறிஸ் வோக்ஸ் வீழ்த்தினார். ஆசாத் ஆஷிக் 29 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்த ஷதாப் கானை இம்முறை சோபிக்கவிடாமல் 15 ரன்னில் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்த, 122 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் ஷான் மசூத், பாபர் அசாம் மற்றும் ஷதாப் கான் ஆகிய மூவரின் பொறுப்பான பேட்டிங்கால் 326 ரன்கள் அடித்தது. இம்முறை அவர்கள் மூவருமே ஏமாற்றமளித்த நிலையில், மற்றவர்கள் வழக்கம்போலவே சொற்ப ரன்களுக்கு நடையை கட்ட பாகிஸ்தானின் நிலை மோசமாகவுள்ளது. 3ம் நாள் ஆட்டம் முடிய 11 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் அடித்துள்ளது பாகிஸ்தான்.