இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவில்லாமல் முடிந்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. மான்செஸ்டரில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவரில் 195 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஜமான் இணைந்து மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஆரம்பம் முதலே அடித்து ஆட தொடங்கிய அவர்கள் இருவரையும் இங்கிலாந்து பவுலர்களால் அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியவில்லை. 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 8.3 ஓவரில் 72 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய ஃபகர் ஜமான், 22 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்த அணியின் சீனியர் வீரரான முகமது ஹஃபீஸ், மிகச்சிறப்பாக ஆடினார். அரைசதம் அடித்த பாபர் அசாம் 56 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் முகமது ஹஃபீஸுடன் ஷோயப் மாலிக் ஜோடி சேர்ந்தார். 
 
இங்கிலாந்து பவுலிங்கை பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஹஃபீஸ் அரைசதம் அடித்தார். வெறும் 36 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 69 ரன்களை விளாசி, டாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். ஹஃபீஸ் அதிரடியான பேட்டிங்கில் மிரட்ட, மற்றொரு சீனியர் வீரரான ஷோயப் மாலிக் வெறும் 14 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றமளித்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 195 ரன்களை குவித்து 196 ரன்கள் என்ற சவாலான இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது. அந்த அணியும் சிறப்பாக ஆடி இலக்கை விரட்டிவருகிறது.