பாகிஸ்தானை பங்கமாய் கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..! கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலடி கொடுத்த பாக்., பிரதமர்
டி20 உலக கோப்பையில் தங்கள் நாட்டு அணியிடம் தோல்வியடைந்த பாகிஸ்தானை ஜிம்பாப்வே அதிபர் படுமோசமாக கிண்டலடித்திருந்த நிலையில், அதற்கு கோபப்படாமல் பெருந்தன்மையுடன் பதிலடி கொடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப்.
டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், வலுவான அணிகளில் ஒன்றாகவும், கண்டிப்பாக அரையிறுதிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவிடம் கடைசி பந்தில் தோல்வியடைந்தது பாகிஸ்தான். அதுகூட பரவாயில்லை. வலுவான இந்திய அணியிடம் கடுமையாக போராடி கடைசி பந்தில் தான் தோற்றது. ஆனால் ஜிம்பாப்வேவிடம் வெறும் 131 ரன்கள் என்ற எளிய இலக்கை அடிக்க முடியாமல் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியளித்தது.
டி20 உலக கோப்பை: மழையால் ரத்தாகும் போட்டிகள்.. குறையும் சுவாரஸ்யம்..! இதோ புள்ளி பட்டியல்
பாகிஸ்தான் - ஜிம்பாப்வே இடையேயான போட்டி பெர்த்தில் நடந்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 130 ரன்கள் அடித்தது. பாகிஸ்தான் அணியின் பவுலிங் சிறப்பாக இருந்தது. ஆனால் ஃபீல்டிங் படுமட்டமாக இருந்தது. ஃபீல்டிங்கில் சொதப்பியதால் தான் ஜிம்பாப்வே அணி 130 ரன்கள் அடித்தது. இல்லையெனில் இன்னும் குறைவான ஸ்கோருக்கு ஜிம்பாப்வேவை சுருட்டியிருக்கலாம்.
பின்னர் 131 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகிய 2 முன்னணி மற்றும் முக்கிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, இஃப்டிகார் அகமது, ஹைதர் அலி என வழக்கம்போலவே மிடில் ஆர்டர் சொதப்பியது. ஷான் மசூத் மட்டும் 44 ரன்கள் அடித்தார். ஆனால் அவரும் 16வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி பந்தில் 3 ரன் அடிக்க முடியாமல் ஒரு ரன் மட்டுமே அடித்து, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது பாகிஸ்தான்.
131 ரன்கள் என்ற எளிய இலக்கை அடிக்க முடியாமல் ஜிம்பாப்வேவிடம் பாகிஸ்தான் தோற்றது கிரிக்கெட் ரசிகர்களுக்கே பேரதிர்ச்சிதான்.
ஜிம்பாப்வே அணியின் வெற்றியை அந்த நாடே கொண்டாடியது. அந்தவகையில், அந்த அணிக்கு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்த ஜிம்பாப்வே அதிபர் எமர்சன், ஜிம்பாப்வேவிற்கு இது சிறப்பான வெற்றி. ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கு வாழ்த்துகள். அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை பாகிஸ்தான் அனுப்பவேண்டும் என்று பாகிஸ்தானை மிகக்கடுமையாக கிண்டலடித்திருந்தார்.
டி20 உலக கோப்பை: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி மழையால் ரத்து..! பெரும் ஏமாற்றம்
ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், எங்களிடம் உண்மையான மிஸ்டர் பீன் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மையான கிரிக்கெட் ஆர்வம் இருக்கிறது. பாகிஸ்தானியர்களுக்கு சரிவிலிருந்து சட்டென மீண்டெழும் வழக்கம் இருக்கிறது. ஜிம்பாப்வே அணி நன்றாக ஆடியது. உங்களுக்கு வாழ்த்துகள் மிஸ்டர் பிரசிடெண்ட் என்று மிகவும் பெருந்தன்மையுடன் கோபப்படாமல் பதிலடி கொடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷரிஃப்.