ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. 

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். பர்ன்ஸ் 97 ரன்களில் ஆட்டமிழந்தார். வார்னர் நேற்றைய ஆட்ட முடிவில் 151 ரன்களுடனும் லபுஷேன் அரைசதம் கடந்தும் களத்தில் இருந்தனர். 

மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 154 ரன்களுக்கு வார்னர் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஸ்மித், வெறும் 4 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் லபுஷேனுடன் ஜோடி சேர்ந்த மேத்யூ வேட் சிறப்பாக ஆடி அரைசதம் அடிக்க, மறுமுனையில் வழக்கம்போல மிகச்சிறப்பாக ஆடிய லபுஷேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 

மேத்யூ வேட் 60 ரன்களில் ஆட்டமிழக்க, லபுஷேனுடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். சதத்திற்கு பின்னரும் பொறுப்புடனும் தெளிவாகவும் சிறப்பாக ஆடிய லபுஷேன் 150 ரன்களை கடந்தார். நிதானமாக ஆடிக்கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் 24 ரன்களில் ஹாரிஸ் சொஹைலின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் லபுஷேனுடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக் வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 532 ரன்கள் அடித்திருந்தது. டீ பிரேக் முடிந்து லபுஷேனும் பெய்னும் களத்திற்கு வந்தனர். இரட்டை சதத்தை நோக்கி லபுஷேன் ஆடிக்கொண்டிருக்க, இன்னிங்ஸின் 149வது ஓவரில் டிம் பெய்ன் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து 151வது ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடியின் பந்தில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்து இரட்டை சதத்தை தவறவிட்டார் லபுஷேன். அதன்பின்னர் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 158வது ஓவரில் ஆஸ்திரேலிய அணி 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 149வது ஓவரில் 6வது விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 9 ஓவர்களில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்து 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

340 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள், இன்னிங்ஸ் தோல்வி அடைவதை முதல் சில ஓவர்களிலேயே உறுதி செய்துவிட்டனர். ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரிலேயே கேப்டன் அசார் அலி வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டார்க்கின் அடுத்த ஓவரில் அடுத்த விக்கெட்டும் காலி. ஹாரிஸ் சொஹைலையும் ஸ்டார்க் தனது அடுத்த ஓவரில் வீழ்த்த, ஆஷாத் ஷாஃபிக்கை கம்மின்ஸ் டக் அவுட்டாக்கி அனுப்பினார். 

இதையடுத்து தொடக்க வீரர் ஷான் மசூத்துடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் இணைந்து அடுத்த விக்கெட்டை இழந்துவிடாமல் மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்தனர். மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் அசாம் 20 ரன்களுடனும் ஷான் மசூத் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அந்த அணி இன்னும் 276 ரன்கள் பின் தங்கியிருப்பதால், இந்த போட்டியில் தோல்வியடைவது உறுதி. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை. இன்னும் 2 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய பவுலர்கள் வீழ்த்திவிட்டால், அதன்பின்னர் அடுத்த சில ஓவர்களில் போட்டி முடிந்துவிடும். ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொள்வது பாகிஸ்தான் அணிக்கு கஷ்டமான விஷயம்தான்.