பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயரிங் செய்துகொண்டிருந்தபோதே மாரடைப்பால் அம்பயர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கராச்சி டிஎம்சி மைதானத்தில் நடந்த கிளப் போட்டி ஒன்றுக்கு அம்பயரிங் செய்துகொண்டிருந்தபோது நசீம் ஷேக் என்ற 56 வயது அம்பயர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அம்பயர் நசீம் ஷேக் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கறிக்கடை வைத்திருந்த நசீம் ஷேக், கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் அம்பயராக செயல்பட்டுவந்தார். 

இந்நிலையில், கிரிக்கெட் போட்டிக்கு அம்பயரிங் செய்து கொண்டிருந்தபோதே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.