இந்திய அணியின் மிகச்சிறந்த மற்றும் அபாயகரமான பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா. ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பது ரோஹித் தான். விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே வெறும் 5 புள்ளிகள் மட்டும்தான் வித்தியாசம். அதனால் விரைவில் விராட் கோலியை முந்துவதற்கான வாய்ப்புள்ளது. 

ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டால் பின்னர் கண்டிப்பாக பெரிய இன்னிங்ஸ் ஆடிவிடுவார். களத்தில் நிலைக்க சிறிது நேரமும் அதிகமான பந்துகளும் எடுத்துக்கொண்டாலும் கூட, அவரது இன்னிங்ஸின் பிற்பாதியில் அதையெல்லாம் ஈடுகட்டி அதிகமான ரன்களை அடித்துவிடுவார். அதனால்தான் அவரால் அசால்ட்டாக 150 ரன்களுக்கு மேல் குவிக்கமுடிகிறது. 

ஒருநாள் கிரிக்கெட்டில் யாருமே நினைத்துக்கூட பார்க்கமுடியாத வகையில், 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். 7 முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை தொடரில் 9 இன்னிங்ஸ்களில் ஆடி 5 சதங்களை விளாசினார். ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராக ரோஹித் சர்மா திகழ்கிறார். 

உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 140 ரன்களை குவித்தார். அந்த போட்டி குறித்தும் ரோஹித் சர்மா குறித்தும் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ், ரோஹித் சர்மாவை அணியில் பெற்றது இந்திய அணியின் அதிர்ஷ்டம். ரோஹித் சர்மா பந்துகளை அபாரமாக கணிக்கிறார். பந்தை விரைவிலேயே கணித்துவிடுவதால் ரோஹித் சர்மா அவரது ஷாட்டை ஆட தயாராகிவிடுகிறார். மற்ற எந்த வீரரை விடவும் ரோஹித் சர்மா விரைவில் பந்தை கணிக்கிறார். அவரிடம் நிறைய விதமான ஷாட்டுகள் இருக்கின்றன. ரோஹித் சிறந்த பேட்ஸ்மேன் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.